:நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. ஏராளமான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் தங்கள் எதிர்காலத்தை நினைத்துக் கலங்கி நிற்கிறார்கள்.

இந்த நிலையில், இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் ஸ்கில் டிரெய்னிங் என்ற பெயரில் இளைஞர்களை அப்ரன்டீஸ்களாக தேர்வு 3 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு ஸ்டைஃபனுடன் பயிற்சி அளித்து வருகிறது. 

சரி இவர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்று ஆராய்ந்ததில் நமக்குக் கிடைத்திருப்பது மிகவும் அதிர்ச்சி தரும் தகவலாகும்.

ரயில்வே அதிகாரிகளுக்கு டீ போட்டுக் கொடுப்பது, டீ வாங்கி வந்து கொடுப்பது, தோட்டத்தை பராமரிப்பது, குப்பைகளை அகற்றுவது, அலுவலக உதவியாளர் போன்ற வேலைகளைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெரும்பாலான இளைஞர்களுக்கு ரயில்வே தொடர்பாக எந்த பயிற்சியும் அளிக்கப்படுவதில்லை. ஆனால், பயிற்சியின் நிறைவில் அவர்களுக்கு வழக்கமான பயிற்சி சான்றிதழ் ஜம்மென்று வழங்கப்பட்டு விடுகிறது.

திருச்சியின் பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் இருக்கும் 411 பயிற்சியாளர்களுக்கும் இதுதான் நிலைமை என்கிறது உண்மையறிந்த தகவல்கள்.

இந்தியாவின் வட மாநிலங்களில் இருந்துதான் பெரும்பாலான இளைஞர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு என்று பிரத்யேக பயிற்சிகளோ, பணிகளோ இல்லை. அதிகாரிகளோ அவர்களுக்கு என்னென்னப் பணிகளை செய்யத் தேவைப்படுகிறார்களோ அதற்கெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது தகவல்.

பயிற்சியாளர்களோ, தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமை குறித்து குரல் கொடுக்கவும் பயப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, இவர்களுக்கு இந்த வேலை செய்ய ரயில்வேயால் ரூ.5,700 முதல் ரூ.7,300 ஸ்டைஃபனாகவும் வழங்கப்படுகிறது. ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல் ஆண்டில் மாதந்தோறும் ரூ.5,700ம், இரணட்ம் ஆண்டில் 6,500ம், மூன்றாம் ஆண்டில் ரூ.7,300ம் ஸ்டைஃபனாக வழங்கப்படுகிறது.

பயிற்சியின் நிறைவாக சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழைக் கொண்டு வேறு எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம். அதே சமயம், ரயில்வே பணியில் சேரவும் இந்த சான்றிதழ் கூடுதல் பலம்.  இந்த ஒரே ஒரு சான்றிதழ் வேண்டும் என்பதால்தான், பல இளைஞர்களும் அதிகாரிகள் செய்யும் அனைத்து தொல்லைகளையும் பொறுத்துக் கொள்கிறர்கள்.

9 இளைஞர்கள் இதுபோன்ற மோசமான பணிகளை செய்யச் சொன்னதால் சொந்த ஊர்களுக்கே திரும்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு அப்ரன்டீஸ் இது பற்றி கூறுகையில், ஸ்கில் டிரெய்னிங் என்று நினைத்து தான் வந்தோம். ஆனால் இங்கே ஊழியர்களுக்கு டீ கொடுக்கும் பணியைத்தான் செய்கிறேன். என்னுடன் வந்த இளைஞர்கள் பொன்மலையில் பல நாட்களாக தோட்ட வேலை செய்கிறார்கள் என்று கூறினார்.

இங்கு வந்து எதையும் நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை. கற்பிக்கப்படவும் இல்லை. எங்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செய்து வேலை வாங்குகிறார்கள். பியூன் வேலையும் செய்கிறோம். இதனால் சிலர் வீட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டனர் என்கிறார் கவலையோடு.

இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, உடனடியாக இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

நன்றி : dinamani


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here