இந்து தீவிரவாதம் – கமலின் கருத்துக்கு பின்னிருக்கும் சமாளிப்புகள்

0
353
Kamal Haasan

ட்விட்டரில் அரசியல் கருத்துகள் பேச ஆரம்பித்த கமலின் போக்கில் நாளுக்குநாள் மாறுதல். முதலில் மோடியை கேள்வி கேட்காமல் ஆதரித்தவர், சமீபமாகக்கூட மோடியின் திட்டங்களை ஆதரித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என்பது நிரூபணமாகும்வரை அதனை ஆதரிப்பேன் என்றவர், கடும் விமர்சனங்களுக்குப் பிறகு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்ததற்கு மன்னிப்பு கேட்டார். இப்போது கொஞ்சம் முன்னேற்றம். இந்து தீவிரவாதம் இல்லை என்று சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். ஆனால், அந்த கருத்துக்குப் பின்னே ஒளிந்திருக்கும் விஷயங்கள் ஆபத்தானவை.

வார இதழில் கமல் தொடர் எழுதி வருகிறார். அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவுவது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கமல் பதிலளித்திருந்தார்.

“கலாசாரம், பண்டிகை இறை வழிபாடு, இசை, கலை என பல வழிகளிலும் பழமையை பரப்ப முற்படுகின்றனர். மற்ற மதங்களில் உள்ள வலதுசாரிகளும் பதிலுக்கு எதிர்வாதம் செய்யவும், எதிர்வினை ஆற்றவும் கிளம்புகிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு தழுவிய சீரழிவு” என்று கூறியுள்ளார்.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்துத்துவ சக்திகளை விமர்சிப்பது போல் இருக்கும். ஆனால், அவர்களின் வன்முறையை கமல் சமன்படுத்த முயல்கிறார். இன்று இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் மேற்கொள்ளும் வன்முறை – அது மாட்டுக்கறி விவகாரமாக இருந்தாலும், பிற மத நம்பிக்கைகளை ஒடுக்குவதாக இருந்தாலும், முற்போக்காளர்களை தாக்குவதாக இருந்தாலும் – வேறு எந்த மத சக்திகளுடன் ஒப்பிட முடியாதவை. ஆனால் கமல் இந்துத்துவ வன்முறையை விமர்சிப்பது போல் விமர்சித்து, பிற மதங்களைச் சேர்ந்த வலதுசாரிகளும் அதேயளவுக்கு எதிர்வினையில் இறங்குவதாக போலியான சித்திரத்தை தருகிறார். இது இந்துத்துவ சக்திகளை தட்டிக் கொடுப்பதைப் போல. அவன் செய்றான், தப்புதான், அதேயளவுக்கு மத்தவங்களும் செய்றாங்க என்பது. இந்தியாவில் பிற மதத்தவர்கள் இந்துத்துவ சக்திகள் அளவுக்கு எங்கு எதிர்ப்பிலும், வெறுப்பிலும், வன்முறையிலும் ஈடுபடுகிறார்கள்? கமல் பதில் சொல்வாரா?

“ஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்துவரும் வேளையில், பழைமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களை போதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணையதளத்தில் சினிமாக் கலைஞர்களை சாதிவாரியாக பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன” என்று கமல் எழுதுகிறார்.

ஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில் என்று கமல் எழுதுவது எந்த அளவுக்கு உண்மை? ஒருவேளை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் அப்படியொரு தலைமுறை இருக்கலாம். ஆனால் தமிழகம் ஆழ்வார்பேட்டை அலுவலகம் மட்டுமில்லையே. ‘இப்ப யார் சார் சாதிப் பார்க்கிறாங்க’ என்ற மேம்போக்கான வியாக்கியானத்துக்கும் கமலின் இந்த வார்த்தைகளுக்கும் வித்தியாசமில்லை.

“முன்பெல்லாம், இத்தகைய இந்து வலதுசாரியினர் வன்முறையில் ஈடுபடாமல் வாதப்பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை கையாண்டனர். இப்போது அது ஒத்து வராததால் அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்” என்கிறார் கமல்.

கமல் இதுநாள்வரை ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாரா? முன்பெல்லாம் என்றால் எப்போது? அக்பர், அசோகர் காலத்திலா? காந்தி கொலை தொடங்கி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது, குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டது, முசாபர் நகர் கலவரம், மாட்டுக்கறி விவகாரத்தில் நடந்த கொலைகள், கல்புர்கி தொடங்கி கொல்லப்பட்ட முற்போக்காளர்கள் என இந்துத்துவா எப்போதுமே வன்முறையின் முகமாகவே இருந்திருக்கிறது. இந்த உண்மையை மறைத்து, இதோ நேத்துவரைக்கும் நல்லாதான் இருந்தான், இப்போதான் கொஞ்சம் மாறத் தொடங்கியிருக்கிறான் என்று இந்துத்துவ சக்திகளுக்கு வக்காலத்து வாங்குவது எவ்வளவு பெரிய மோசடி?

“எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியை காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது” என்று முந்தைய கருத்தை நீட்டித்திருக்கிறார்.

என்றைக்கு இந்துத்துவவாதிகள், எங்கே ஒரு இந்து தீவிரவாதியை காட்டுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்? அவர்களைப் பொறுத்தவரை பிற மதத்தினர் மீது தாக்குதல் தொடுப்பவர்கள் தேசபக்தர்கள். மாட்டுக்கறி வைத்திருந்ததாக அப்பாவிகளை அடித்துக் கொன்றவர்களை பகத்சிங்குடன் உதாரணப்படுத்தி மகிழ்ந்த கூட்டம் இது. இவை எதுவுமே தெரியாத பாவனையில் கமல் எழுதினால் நம்புவதற்கு நாம் என்ன மடையர்களா?

இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு இணையானது கமலின் வக்காலத்து வார்த்தைகள். கமலின் இந்த சமாளிப்புகள் தமிழகத்தில் உடனடியாக தோலுரிக்கப்படும் என்பதே நமக்கிருக்கும் ஒரே ஆறுதல்.

இதையும் படியுங்கள் : The Golden Touch of Jay Amit Shah (Courtesy: The Wire)

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்