இந்து தீவிரவாதம் இல்லையென இனி யாரும் கூற முடியாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வார இதழனான ஆனந்த விகடனில் நடிகர் கமல்ஹாசன், ”என்னுள் மையம் கொண்ட புயல்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வருகிறார். இதில் ”எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்? என இனி யாரும் கேட்க முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது” என்று எழுதியுள்ளார். இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல்.நரசிம்ஹ ராவ், “கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முஸ்லிம்களின் வாக்கு வங்கிக்காக இதுபோன்று பேசி வந்தனர் என்றும், முன்னாள் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம் மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் இந்துத் தீவிரவாதம் நாட்டில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் பேசியதையும் பார்த்திருக்கிறோம். இதேபோன்று கருத்துகளைக் கூறி வந்த ப.சிதம்பரம், ஹஃபீஸ் சயீத் ஆகியோரின் வரிசையில் நடிகர் கமல்ஹாசனும் இணைந்துள்ளார்” என்றார். மேலும் அவர், கமல்ஹாசனின் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

கமல்ஹாசனின் கருத்து குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராகேஷ் சின்ஹா, “கமல்ஹாசன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்” என குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்