இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கமில்லை – கமலின் பிறந்தநாள் பேச்சு

0
336
Kamal Haasan

இன்று பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்த கமல், இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கமில்லை என்றார்.

கமலின் பிறந்தநாளுக்கு நற்பணி கொண்டாட்டங்கள், பொதுக்கூட்டம், கவியரங்கம் என்று களைகட்டும். இந்தமுறை மழை வெள்ளம் காரணமாக வழக்கமான கொண்டாட்டங்கள் வேண்டாம், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்பணி செய்யுங்கள் என்று அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

பிறந்தநாளை முன்னிட்டு திநகரில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை கமல் சந்தித்தார். அப்போது மய்யம் விசில் என்ற செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். நியாயத்திற்காக குரல் எழுப்பும் கருவி மய்யம் விசில் என்றார் கமல். அதில் பேச மூன்று ஹேஷ்டேக்குகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்த சந்திப்பில் கமல் பேசியவை…

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது என்னுடைய கனவு. மக்கள் பிரச்சனைகளை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன்.

தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துவிட்டன. பழுதை சரி செய்ய மக்கள் ஒன்றிணைய வேண்டும். சக்கரத்தின் அச்சில் மைக்குப் பதில் மணல் சேர்ந்துவிட்டது.

கட்சியின் பெயரை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் கட்சித் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி இருக்கிறேன். அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்துக்களை புண்படுத்துவது என் நோக்கமில்லை. நானே அதிலிருந்து வந்து வேறு திசையில் பயணிப்பவன்தான். தீவிரவாதம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

பிராமண சமூகத்தை நான் தேடிப்போனது இல்லை. என்னுடைய சட்டையை கழற்றிப் பார்த்தாலே தெரியும். நான் என்னுடைய பிறந்த குலத்திலிருந்து விலகி வந்தவன். எனக்கு எல்லா சமூகத்திலும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

பிராமண சமூகத்தில் பிறந்ததை பெருமையாகவும் நினைக்கவில்லை சிறுமையாகவும் கருதவில்லை.

மய்யம் விசில் செயலி ஒரு டிஜிட்டல் அரங்கம், இப்போது அது பற்றி சொல்ல முடியாது, சொன்னால் வேறு யாராவது அரைகுறையாக அதனை செய்துவிடுவார்கள், ஜனவரியில் இருந்து இந்த செயலி இயங்கும் என்று கமல் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : ’இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்