இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

டெல்லி மாநில பாஜக தலைவர் அஷ்வினி குமார் உபாத்யாய் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், சிறுபான்மை சமய, இன, மொழி மக்களை அவர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாத்து, அவர்களின் அடையாளம் வளர வழிவகுக்க வேண்டும் என தேசிய சிறுபான்மை ஆணையச் சட்டம் 1992இல் கூறப்பட்டுள்ளதுபோல், ஜம்மு காஷ்மீர் (28.44%), மிசோராம் (2.75%), நாகலாந்து (8.75%), லட்சத்தீவுகள் (2.5%), அருணாச்சலப் பிரதேசம் (29%), மணிப்பூர் (31.39%) மற்றும் பஞ்சாப் (38.40%) மாநிலங்களில் வாழும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு வெள்ளிக்கிழமை (இன்று) உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அர்விந்த் தத்தார் ஆஜரானார். விசாரணையின் முடிவில், இந்த மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், இது தொடர்பாக தேசிய சிறுபான்மை ஆணையத்திடம் மனுதாரர் அணுகலாம் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்