(October 21, 2015)

கடைசியாக ஒரு தமிழ் எழுத்தாளர் அறத்துக்காக ஆவேசத்துடன் பேசியிருக்கிறார். ”முகமது அக்லாக்கின் படுகொலை ஒரு மாபாதகச் செயல்; உணவுப் பழக்கத்துக்காக ஒருவரைக் கொல்வது என்பது சகியாமையின் உச்சகட்டம்” என்று இந்திரா பார்த்தசாரதி தனது தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 1977 ஆம் ஆண்டில் தனது “குருதிப்புனல்” நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர், இந்திரா பார்த்தசாரதி. கீழ்வெண்மணியில் 42 தலித்துகள் ஆதிக்கச் சாதியினரால் எரித்துக் கொல்லப்பட்ட தீண்டாமைத் துயரத்தைப் பேசிய நாவல், “குருதிப்புனல்”.

இந்திரா பார்த்தசாரதியிடம் இப்போது.காம் பேசியது. “சாகித்ய அகாடமியின் தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரிக்கு நான் செவ்வாய்க்கிழமையன்று கண்டனக் கடிதத்தை அனுப்பியுள்ளேன்,” என்றார் 38 ஆண்டுகளுக்கு முன்பு அகாடமி விருது பெற்ற இந்த முதுபெரும் எழுத்தாளர். இந்தியா முழுவதுமிருந்து சுமார் ஐம்பது எழுத்தாளர்கள் “நாட்டில் பெருகிவரும் சகியாமைக்கு” எதிராக சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பித் தந்துள்ளார்கள். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மாட்டின் பெயரால் மக்களைக் கொல்லும் வன்முறைகளைத் தடுக்காமல் இருப்பதைக் கண்டித்து இந்த எழுத்தாளர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

1.நயன்தாரா செகல்
2.அசோக் வாஜ்பேயி
3.உதய் பிரகாஷ்
4.சாரா ஜோசப்
5.ஆதம்ஜித் சிங்
6.கணேஷ் தேவி
7.ராஜேஷ் ஜோஷி
8.என்.ஷிவ்தாஸ்
9.அமன் சேதி
10.ரஹ்மான் அப்பாஸ்
11.வார்யம் சந்து
12.தலீப் கவுர் திவானா
13.அஜ்மீர் சிங் அவ்லாக்
14.ஜி.என்.ரங்கநாத ராவ்
15.அரவிந்த் மாளகத்தி
16.மங்களேஷ் தப்ரால்
17.சசி தேஷ்பாண்டே
18.குலாம் நபி காயல்
19.குர்பசன் சிங் புல்லார்
20.சந்திரசேகர் பாட்டீல்
21.ஹோமன் போர்கொஹைன்
22.நிருபமா போர்கொஹைன்
23.அனில் ஜோஷி
24.டி.என்.ஸ்ரீநாத்
25.ஜஸ்விந்தர்
26.சுர்ஜித் பட்டர்
27.சமன் லால்
28.தர்ஷன் பட்டர்
29.மந்திரகாந்தா சென்
30.கெகி என்.தாருவாலா
31.மாயா கிருஷ்ண ராவ்
32.மேக் ராஜ் மிட்டர்
33.ரஹ்மத் தரிகெரே
34.வீரண்ணா மடிவாலர்
35.ஹனுமந்த் ஹலிகேரி
36.ஸ்ரீதேவி வி.ஆலூர்
37.சித்தானந்தா சாலி
38.கே.சச்சிதானந்தன்
39.பி.கே.பாறக்கடவு
40.டி.சதீஷ் ஜவாரே கவுடா
41.சங்கமேஷ் மெனசினாக்கி
42.பல்தேவ் சிங் சதக்னாமா
43.கும்பர் வீரபத்ரப்பா
44.முனவர் ரானா
45.காத்யாயானி வித்மாஹே
46.காசிநாத் சிங்
47.ரியா விதாஷா
48.மர்கூப் பனிஹலி
(இந்தப் பட்டியல் முழுமையடையவில்லை)

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி போன்ற எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மாட்டுக்கறி தின்றதாகச் சொல்லி முகமது அக்லாக் படுகொலை செய்யப்பட்டார். மாட்டின் பெயரால் நோமன் அக்தரும் சாஹித் ரசூல் பட்டும் கொல்லப்பட்டார்கள். காஷ்மீர் எம்.எல்.ஏ என்ஜினீயர் ரஷீத் மாட்டுக்கறி விருந்து கொடுத்ததற்காக பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களால் சட்டசபையிலேயே தாக்கப்பட்டார். தாக்குதலுக்கும் வன்முறைக்கும் உள்ளான அப்பாவிகளின் சொந்தங்கள் இயலாமையால் இறைவனிடம் முறையிட்டிருப்பார்கள்.

மத, மொழி எல்லைகளைக் கடந்து மனிதாபிமானிகளாக எழுத்தாளர்கள் ஒன்றுபட்ட தருணத்தை மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “இந்தியாவின் வரலாற்றுத் தருணம்” என்று அழைத்தார். சாகித்ய அகாடமி அக்டோபர் 23 (வெள்ளிக்கிழமை) அன்று அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளால் வெளிப்படுத்த முடியாத கோபத்தை, மக்களின் மனசாட்சியாக எழுத்தாளர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்திரா பார்த்தசாரதி தான் எழுதிய கடிதத்தில் இந்தியாவின் கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர் ஆர்தர் லெவெலின் பாஷம் அவர்களை மேற்கோள் காட்டியுள்ளார். “கருத்து வித்தியாசங்களை வரவேற்பதும் கற்பனைக்கெட்டாத சகிப்புத்தன்மையும் இந்தியாவின் தனித்தன்மை என்பதை அறிஞர் பாஷம் சுட்டிக் காட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இதனை உணர்ந்துகொள்ள வேண்டும். சகியாமையால் நடக்கும் சம்பவங்கள் என் மனதைப் பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன” என்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

எழுத்தாளர்கள் வைரமுத்து, மாலன், சா.கந்தசாமி, அபிலாஷ் போன்றோர் ஆட்சியாளர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற நினைக்கும் வேளையில் தனது தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்தி, அறம் பேசிய இந்திரா பார்த்தசாரதியின் தனித்தன்மையை பூமி போற்றும்; அந்தச் சாமி போற்றும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here