இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்த அமேசான் நிறுவனம்

0
796


இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கான பார்சல்களை ரயில்கள் மூலம் நகரங்களிடையே கொண்டுசெல்வதற்கான முன்னோட்ட நடவடிக்கைக்காக இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

வாடிக்கையாளர்களுக்கான பார்சல்களை ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு கொண்டு செல்வதற்காக முன்னோட்ட நடவடிக்கையாக ரயில்களை பயன்படுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, தில்லி-மும்பை, மும்பை-டெல்லி, டெல்லி-கொல்கத்தா நகரங்களிடையே இயங்கும் ரயில்களில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் பார்சல்கள் கொண்டுசெல்லப்படும். ரயில்கள் மூலம் பார்சல்களை அனுப்புவதால் வாடிக்கையாளர்களிடம் அவை விரைவாகவும், சேதங்கள் இன்றி நம்பகத்தன்மையுடனும் சென்று சேரும் என்று அறிகிறோம். 

ரயில்களில் பார்சல் அனுப்புவதற்காக செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், இந்திய ரயில்வேக்கு அதற்கான கட்டணம் செலுத்துதல் போன்ற நடைமுறைகளை திட்டமிட்டு வருகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அமேசான் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (பார்சல் போக்குவரத்து) அபினவ் சிங் கூறுகையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும் பார்சல்களை கொண்டு சேர்ப்பதில் இந்திய ரயில்வே எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். 

முன்னோட்ட அடிப்படையில் சில நகரங்களிடையே மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியிலிருந்து கிடைக்கும் பலனின் பேரில் இந்திய ரயில்வேயுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க உறுதிபூண்டுள்ளோம் என்றார்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here