ஆசியாவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது – கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் குறைவான வளர்ச்சி இது. 2019 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி மெதுவானதாக இருக்கலாம், ஆனால் அது பொருளாதார மந்தநிலை என்ற ஆபத்தாக இல்லை என்று இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு நிறைவுற்று, 2020 ஆம் ஆண்டை நாடு எதிர்நோக்கியுள்ள நிலையில், அரசு எதிர்கொள்ளும் முக்கியமான பொருளாதார சவால்கள் என்ன?

பொருளாதாரம் குழப்பமான நிலையிலிருந்தால், சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கும் நிலை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய சூழலில் இந்தியா, மந்தமான பொருளாதாரம், அதிகபட்ச அளவிலான வேலைவாய்ப்பின்மை, கடுமையான நிதிப் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறது.

2020 தொடக்கத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, இந்த அனைத்து விஷயங்களையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கும். இப்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புதிய கொள்கைகள் உருவாக்குதல் அல்லது பழையனவற்றைத் திருத்தி அமைக்கும் போது இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.

குறைவான வளர்ச்சி

பொருளாதாரம்
பொருளாதாரம்

உலகப் பொருளாதாரத்துக்கு சவால் மிகுந்ததாக இந்த ஆண்டு இருந்துள்ளது. அதன் தொடர்விளைவான பாதிப்புகள் இந்தியப் பொருளாதாரத்திலும் காணப்பட்டது. மூன்றாவது காலாண்டின் வளர்ச்சி 4.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. தொடர்ந்து ஆறாவது காலாண்டாக, சந்தை எதிர்பார்ப்புகளைவிட வளர்ச்சி குறைந்திருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் குறைந்த அளவிலான வளர்ச்சி இது.

தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகளும், ஏற்றுமதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. இந்தியாவின் ஜி.டி.பி.யில் 60 சதவீத பங்கு வகிக்கும், உள்நாட்டு நுகர்வும் வருத்தப்படக் கூடிய நிலைக்கு மாறிவிட்டது. இந்தியாவின் மத்திய வங்கியான, ரிசர்வ் வங்கி 2019ல் முன் எப்போதும் இல்லாத வகையில் ஐந்து முறை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

ஆனால், அதன் தாக்கம் இன்னும் உணரப்படவில்லை. அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றாலும், அவை போதுமானதாக இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். பொருளாதார வளர்ச்சிக் குறைவில் சிக்கியிருக்கும் இந்தியா பற்றி கருத்து தெரிவித்த பன்னாட்டு நிதியம், 2020 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான உத்தேச வளர்ச்சி அளவை `கணிசமாகக் குறைக்கப் போவதாக’ கூறி எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரித்து, செலவழித்தலை அதிகமாக்குவதற்கு, பன்னாட்டு நிதியம் யோசனை கூறியுள்ளது. பணவீக்க அழுத்தங்களைக் கவனத்தில் கொண்டு, வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பன்னாட்டு நிதியம் கூறியுள்ளது.

வட்டி விகிதங்களைக் குறைக்கும் வாய்ப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது என்றாலும், “படிநிலை மாற்றம் சிக்கலானதாக இருக்கும்” என்று பொருளாதார நிபுணர் விவேக் கவுல் கூறுகிறார். “அடுத்தடுத்த வட்டி குறைப்புகளின் பயன்களை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கி நம்பியlதற்கு மாறாக, இது நடக்காமல் போய்விட்டது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

நிதிப் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு நல்ல நடவடிக்கைகள் எடுக்கும். தனியார் துறை வங்கிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம். “பொறுப்பேற்பு தன்மையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கும்போது, வணிக ரீதியிலான முடிவுகள் எடுப்பதற்கு அதிக அனுமதி தருவதாக” அவை இருக்க வேண்டும் என்று பன்னாட்டு நிதியத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் உதவி இயக்குநர் ரணில் சல்கடோ கூறியுள்ளார்.

கடன் மீதான வட்டி குறைப்பு, கார்ப்பரேட் வரிகள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே எடுத்துள்ளது. ஆனால் அது போதுமானவை அல்ல என்று பேராசிரியர் அருண்குமார் கூறுகிறார். “ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்த நிலையிலும், முதலீட்டு அளவுகள் குறைந்துவிட்டன. வர்த்தகக் கடன் 88 சதவீதம் குறைந்து 10 சதவீத அளவுக்குக் குறைந்துவிட்டது. இது பெரிய சரிவு.

நுகர்வோர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கடன்கள் பெறுகின்றனர்.” கார்ப்பரேட் துறையின் சுமையைக் குறைப்பதைக் காட்டிலும், கீழ்மட்ட அளவில் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். “மொத்த முதலீட்டில் 5 சதவீதத்துக்கும் குறைவானதாக உள்ள வெளிநாட்டு முதலீடுகளை நம்பியிருப்பதைவிட, வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெற முயற்சிப்பதைவிட, உள்நாட்டுச் சந்தையில் முதலீட்டை நாம் ஊக்குவித்தாக வேண்டும்.”

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, கிராமப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்கு ரூ.100 லட்சம் கோடியை செலவு செய்யப் போவதாக அரசு அறிவித்திருப்பது, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அது சுமுகமாக நடைபெறுமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2020 பிப்ரவரி முதலாவது வாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது, கூடுதலாக என்ன ஆதாய திட்டங்களை அறிவிக்கப் போகிறார் என்பதையும் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

தள்ளாடும் வேலைவாய்ப்பின்மை

நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகபட்ச அளவை எட்டியுள்ளது என்று 2019 மே மாதம் அரசு ஒப்புக்கொண்டது. 2017 ஜூலை மாதத்துக்கும் 2018 ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக இருந்துள்ளது. நகர்ப்புற இளைஞர்களில் 7.8 சதவீதம் பேருக்கு வேலையில்லை.

“பொருளாதாரமே பிரச்சினையில் உள்ள நிலையில், அரசியல் மற்றும் சமூக பாதிப்புகளும் சேர்ந்து கொள்கின்றன. மாநில தேர்தல்களின் போது, வேலைவாய்ப்பின்மை பிரச்சினை முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்று பொருளாதார நிபுணர் பேராசிரியர் அருண்குமார் கூறினார். நாட்டில் வேலைவாய்ப்பில் 94 சதவீத அளவு, அமைப்புசாரா தொழிலாளர்களைக் கொண்டதாக உள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 45 சதவீதம் இவர்களைச் சார்ந்து உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் அரசிடம் பதிவு செய்யப்படுவதில்லை என்பது பெரிய சவாலான விஷயம். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இதுகுறித்த புள்ளிவிவரங்கள் வருகின்றன.

எனவே அமைப்பு சார்ந்த துறையில் உள்ள அளவில் தான், அமைப்புசாரா துறைகளிலும் வேலைவாய்ப்பு வளர்ச்சி இருக்கும் என்று அனுமானிக்கப் படுகிறது. உண்மையாகப் பார்த்தால், அதிகாரப்பூர்வமாகக் கணிக்கப்பட்டதைவிட மிகவும் குறைவாகவே இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று பேராசிரியர் குமார் கருதுகிறார். பணமதிப்பு நீக்கம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பல துறைகளில் இன்னமும் உணரப் படுகிறது, அதனால் ஏராளமானோர் வேலையிழந்துள்ளனர்.

அரசின் முயற்சிகளின் பயன்கள் பொருளாதாரத்தில் முக்கியமான துறைகளுக்குச் சென்று சேரவில்லை. பொருளாதாரத்தின் போக்குகளை பொருளாதார நிபுணர் விவேக் கவுல் கூர்ந்து கவனித்து வருகிறார். இப்போதைய சூழ்நிலை குறித்து அவர் மேலும் கருத்து கூறியுள்ளார். “பொருளாதார வளர்ச்சியின் வரலாற்றை நீங்கள் பார்த்தால், பெரும்பாலான நாடுகள், தங்கள் தொழிலாளர்களை விவசாயத் துறையிலிருந்து கட்டுமான தொழிலுக்கு மாற்றியுள்ளது. ஏனெனில் கட்டுமானத் துறையில் குறைந்த மற்றும் ஓரளவு தொழில் திறன் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் சிக்கலில் இருப்பதால், இந்த மாற்றம் இங்கே நிகழவில்லை.” கடந்த பத்து ஆண்டுகளில் கட்டுமானத் தொழில் வளர்ச்சி 12.8 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது. வளர்ச்சிக்கான பங்களிப்பு 13.4 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

2020 ஆம் ஆண்டில் அரசு முதலீடுகளை அதிகரித்து, கிராமப்புற கட்டமைப்பு மற்றும் வேளாண்மைத் துறையில் அதிக முதலீடு செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். முதலீடுகள் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பணவீக்கம்

உணவுப் பொருள்கள்

உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கம் சுமார் 6 ஆண்டு கால உச்சத்தைத் தொட்டிருக்கிறது. டிசம்பர் 16 ஆம் தேதி வணிக அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் மாதத்துக்குப் பிறகு வெங்காயத்தின் விலை 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் சில்லரை வணிகப் பொருள்கள் மீதான பண வீக்கம் 4.62 சதவீதமாக இருந்தது. காய்கறிகளின் விலையேற்றம் காரணமாக நவம்பரில் இது 5.54 சதவீதமாக உயர்ந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும்.

இயற்கை காரணிகளால் தான் இவ்வாறு நடந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பருவமழை தாமதமானது, சில பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி ஆகியவை காரணமாக, வழக்கமான அளவுக்கு உணவுப் பொருள்கள் சந்தைக்கு வரவில்லை என்கின்றனர். 2019ல் வழக்கமான பருவமழை பெய்யவில்லை. அவ்வாறு நடந்திருந்தால் விலைவாசி குறைந்திருக்கும். கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிக அளவுக்கு மழை பெய்ததில், கோடைப் பருவப் பயிர்கள் சேதமடைந்தன, குளிர்கால பயிர்கள் சாகுபடி தாமதமானது. அடுத்த சில மாதங்களில் நிலைமை சீராகும் என்றும் பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். ரபி பருவ சாகுபடி பொருள்கள் சந்தைக்கு வரும் போது விலைவாசி சீராகிவிடும் என்று கருதுகின்றனர்.

இதைச் சொல்விட்ட நிலையில், பணவீக்கத்தை கூர்ந்து கவனிப்பது முக்கியமானதாக உள்ளது. உணவுப் பொள்களின் விலைகள் உயர்வாக இருந்தால், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் அது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். நுகர்வோர் செலவழிப்பை அதிகரிக்க உதவும் நோக்கில் வட்டி விகிதத்தை மேலும் குறைப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லாமல் போய்விடும். வளர்ச்சி குறைந்த நிலையிலும், டிசம்பர் மாதத்தில் கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றாமல் இருந்தது நிபுணர்கள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வட்டி விகிதத்தை மேலும் குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றாலும், குறுகிய எதிர்காலத்தில் பணவீக்கம் எப்படி இருக்கும் என்ற கவலை இருப்பதாக ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை

இப்போதைய நிதிப் பற்றாக்குறை பிரச்சினையை சார்ந்த விஷயங்களை எப்படி கையாள்வது என்பது புத்தாண்டில் அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக இருக்கும். அக்டோபர் 2019ல் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை ரூ.7.2 டிரில்லியனாக இருக்கும் என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைக்க அரசு சமீபத்தில் மேற்கொண்ட முடிவு, ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் முயற்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். 2019-20 ஆம் ஆண்டில் அரசின் செலவு ரூ.28 லட்சம் கோடியாக இருக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளது. 2019 ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி சுமார் ரூ.1.76 டிரில்லியன் அளவுக்கு அரசுக்கு நிதி ஒப்பளிப்பு செய்தபோதிலும், இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இறுதியில், கிடைத்திருக்கும் தகவல் உரத்த குரலில், தெளிவான குரலில் வந்திருக்கிறது – அரசு நிறைய வருவாய் ஈட்ட வேண்டியுள்ளது – என்பதே அந்தத் தகவலாக உள்ளது.

இந்தியப் பொருளாதாரம்:

இப்போதைய வரி கட்டமைப்பு முறையை அரசு மறு ஆய்வு செய்வது, இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஒன்றாக இருக்கும். “பணக்காரர்களுக்கான வரியை அதிகரிப்பது” என்பது பேராசிரியர் அருண்குமார் தெரிவிக்கும் யோசனையாக உள்ளது. உண்மையில், இதுவும், இன்னும் பல யோசனைகளும் அரசின் பரிசீலனையில் உள்ளன. அதிக வருவாய் பிரிவில் உள்ளவர்களுக்கு புதிய வரி நிலைகள் உருவாக்குவது, கார்ப்பரேட் வரிகளை குறைத்தது போல தனிநபர் வருமான வரியைக் குறைப்பது, போன்றவையும் அரசின் பரிசீலனையில் உள்ளன. திரட்டப்படும் நிதி, விவசாயிகளுக்கு உதவுவதற்கு கிராமப் பகுதிகளுக்கு அளிக்கவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகள் அளிக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் குமார் கூறினார்.

ஜி.எஸ்.டி. விஷயத்தைப் பொருத்த வரையில், நிலைமை சிக்கலாக உள்ளது என்றாலும், நல்லவேளையாக வரிகளை அரசு உயர்த்தவில்லை. இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்த முன்னாள் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், “ஒருபுறம் ஜி.எஸ்.டி. வரியை உயர்த்திவிட்டு, வருமான வரியைக் குறைப்பது பற்றி யோசிக்க முடியாது. ஜி.எஸ்.டி.யை உயர்த்தினால், நுகர்வு நிலையில் நேரடி பாதிப்பு இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தனிநபர் வருமானம்

“தனிநபர் வருமான வரியைக் குறைத்தால், மக்களின் கைகளில் பணம் அதிகமாக கிடைக்கச் செய்வதற்கான விரைவான வழிமுறையாக இருக்கும்” என்று பொருளாதார நிபுணர் விவேக் கவுல் தெரிவிக்கிறார். ஆனால், வரி வருவாயை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் காரணமாக,வருமான வரித் துறை அதிகாரிகள் பொது மக்களை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கிறார். வரிகள் விஷயத்துக்கு அப்பாற்பட்டு, இந்த பொருளாதார நிபுணர் வேறொரு யோசனையும் தெரிவிக்கிறார். பொதுத் துறை நிறுவனங்களை

தனியார்மயமாக்கும் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் வலியுறுத்துகிறார். ஏர் இந்தியா மற்றும் பி.பி.சி.எல். நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சி தாமதமாகி வருகிறது. இதனால் அரசுக்கு ரூ.40,000 கோடி அளவுக்கு நிதி கிடைப்பதில் தாமதம் ஆகும். நல்ல நிலையில் இயங்காத பொதுத் துறை நிறுவனங்களை அரசு விற்றுவிட வேண்டியது முக்கியமானது என்று கவுல் கருதுகிறார். இந்தப் பொதுத் துறை நிறுவனங்கள் “முதலீட்டை உறிஞ்சிக் கொண்டு, போதிய வருவாயை ஈட்டாமல் உள்ளன. பொதுத் துறை நிறுவனங்கள் எவ்வளவு நிலத்தை பயன்படுத்துகின்றன என்பதை அரசு கணக்கெடுக்க வேண்டும். கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசிக்க வேண்டும்” என்கிறார் கவுல்.

2018 ஆம் ஆண்டு வரையில், உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. 2016ல் காலாண்டு வளர்ச்சி 9.4 சதவீதத்தை எட்டியது. இப்போதைய தருணத்தில், 2020 ஆம் ஆண்டு நம்பிக்கை தரும் வகையில் இல்லை என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு சிறிதளவு தான் பயன் கிடைத்திருக்கிறது என்பதே இதற்குக் காரணம் என்கின்றனர். 2016ல் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது மற்றும் ஜி.எஸ்.டி. அமல் ஆகியவற்றின், தொடர் பாதிப்புகள் பொருளாதாரத்தில் இன்னும் இருக்கின்றன. உலகப் பொருளாதார சூழ்நிலையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் 20 ஆம் தேதி தொழில் வர்த்தக சம்மேளனங்களின் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் பேசிய பிரதமர் திரு. நரேந்தி மோதி, இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு ஒழுக்கத்தை தமது அரசு உருவாக்கி இருப்பதாகவும், 2025 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார நிலையை எட்டும் இலக்கை நோக்கி வலுவான அடித்தளமிட்டிருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்த இலக்கை எட்டும் திசையில் இந்தியா பயணிக்கிறதா? “பிரச்சினை உள்ளதை அரசு முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போது தான் நிலைமையில் முன்னேற்றம் வரும்” என்பது விவேக் கவுலின் இறுதிக் கருத்தாக உள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான விடைகளும், பாதைகளும் 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

———————————————————————————————————-
———————————————————————————-

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here