இந்திய-சீன பதற்றம்: அருணாச்சல பிரதேச எல்லை கிராமங்களில் கள நிலவரம் என்ன?

0
214

இந்தியாவின் வடகிழக்கே உள்ள கடைசி மாநிலம் அருணாசல பிரதேசம். அந்த மாநிலத்தின் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எல்லை சீனாவின் எல்லையையொட்டி இருக்கிறது. இதை தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் சீனா அருணாசல பிரதேசத்தின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி, அதை ‘தென் திபெத்’ என்று அழைக்கிறது.

அருணாச்சல பிரதேச எல்லை தகராறு இருந்தாலும் அதன் அழகான மலைகள், ஆறுகள், காடுகள் என அமைதியான மாநிலமாக இருந்து வந்தாலும், சில காலமாக அங்கு நிலைமை மாறி, எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு, லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலின் தாக்கம், 17 லட்சம் மக்கள்தொகை கொண்ட அருணாசல பிரதேசத்திலும் உணரப்பட்டது. ஆனால், அங்குள்ள நிலைமை தொடர்பான செய்திகள் மிகக் குறைவாகவே வெளிவரும். அத்தகைய எல்லை கிராமங்களில் உள்ள கள நிலவரத்தை இங்கே காணலாம்.

உள் வரி அனுமதி தேவை

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலம், ஆனால் நீங்கள் பிற மாநிலங்களுக்குச் சென்று வருவது போல நேரடியாக இங்கு நுழைய முடியாது.

அருணாசல பிரதேசம் செல்வதற்கு முன் ‘இன்னர் லைன் பெர்மிட்’ (உள்நுழைவு அனுமதி) தேவை. இன்னர் லைன் பெர்மிட் என்பது அருணாசலத்தில் வெளியில் இருந்து வருபவர்களுக்கு (அனைத்து இந்தியர்கள் மற்றும் இந்தியர்கள் அல்லாதவர்கள்) வழங்கப்படும் சிறப்பு அனுமதி ஆவணமாகும்.

இந்த அனுமதியை நாம் பெற்றுக் கொண்டு நேராக அருணாசல பிரதேசம் சென்றோம். இந்த மாநிலத்தின் மக்கள் தொகை அதிகம் இல்லை, எனவே இங்குள்ள கிராமங்களும் சிறியவையாக இருப்பதை அறிந்தோம். ஆனால், அவை ஒன்றுக்கு ஒன்று பல கி.மீ தூர இடைவெளியைக் கொண்டிருந்தன.

சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால் எளிதில் சாலை வழியாக பயணம் செய்ய முடியாத பாதை வழியாக செல்ல வேண்டும். அப்படிப்பட்ட கிராமத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருந்தோம்.

ஹௌலியாங் நகரம்… நாம் சென்ற பாதையில் குறுக்கே தென்பட்ட இடம். இந்த நகரம் அஞ்சாவ் மாவட்டத்தின் தலைமையகமாகும். சீன எல்லையில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த நகரத்தில் இந்திய ராணுவத்தின் ஒரு பெரிய கண்டோன்மென்ட் (ராணுவ பகுதி) உள்ளது.

பயணத்தின் இரண்டாவது நிறுத்தத்தில், சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள வாலாங் நகரத்தை அடைந்தோம். இங்கே நாங்கள் இரவு தங்க வேண்டியிருந்தது.

எல்லைப் பகுதியின் காஹு மற்றும் கிப்து கிராமங்கள், இங்கிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ளன.

இந்தப் பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்குள்ள போர் நினைவுச் சின்னம் வாலாங்கைச் சிறப்புறச் செய்கிறது.

உண்மையில், 1962இல், சீனா இங்கு ஒரு பெரிய பகுதியை ஆக்கிரமித்தது. போரில், சீன வீரர்களிடமிருந்து இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் போது ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், அவர்களின் நினைவாக இங்கு போர் நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் கடைசி எல்லை கிராமம்

வாலாங் நகரம்
வாலாங் நகரம்

வாலாங்கில் இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலை அருணாசல பிரதேசத்தின் கடைசி எல்லை கிராமமான கஹூவை அடைந்தோம்.

அசல் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகிலுள்ள இந்த கிராமத்திலிருந்து பார்த்தால், மறுபுறம் சீனாவின் எல்லை கிராமம் தெரியும்.

உயரமான சிகரங்கள் தென்படுகின்றன. அவற்றுக்கு இடையே தான் எல்ஏசி உள்ளது.

பெருமளவிலான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதை இந்த கிராமத்தில் தெளிவாகக் காணமுடிகிறது. மறுபுறம், சீனாவின் கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் அந்நாட்டு ராணுவத்தினர் இருப்பது தெரிகிறது.

தற்போது, ​​கஹு கிராமத்தில் ராணுவ கட்டுப்பாடுகள் பெரிய அளவில் உள்ளன, ஆனால் இந்த இடம் எப்போதும் இப்படி இருந்ததில்லை. எட்டு முதல் 10 வீடுகள் கொண்ட கஹு கிராமம் அமைதியான பகுதியாக இருந்து வருகிறது,

ஆனால் லடாக்கில் இந்தியா மற்றும் சீன வீரர்களுக்கு இடையேயான மோதல் நடந்தது முதல் ராணுவத்தினரின் இருப்பு இங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

அத்துடன் பொதுமக்கள் நடமாட்ட கட்டுப்பாடுகளும் ராணுவ நடவடிக்கைகளும் வேகமாக அதிகரித்துள்ளன.

சீன வீரர்கள் சில சமயங்களில் எல்.ஏ.சி.க்கு அருகில் வருவார்கள் என்று கிராம மக்கள் கூறுகிறார்கள்.

சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் எப்படி வருகிறார்கள் என்று கிராமத்தைச் சேர்ந்த சிலர் கேமிராவில் தோன்றி எங்களிடம் தெரிவித்தனர்.

காஹு கிராமத்தைச் சேர்ந்த சோச்சி மியோர் என்ற பெண், “எல்லைக்கு அப்பால் இருந்து விவசாயிகளை வழிநடத்தியபடி சீன வீரர்கள் இந்தப் பகுதிக்கு வருகிறார்கள். அவர்கள் அந்த இடத்தைப் பின்தொடர்ந்து சுற்றி வளைக்கிறார்கள். அவர்கள் விலங்குகளை கொட்டகைகளில் விட்டுச் செல்வார்கள். பின்னர் அவர்கள் வந்து அவற்றை அழைத்துச் செல்வார்கள்,” என்றார்.

வாலாங் நகரில் போர் நினைவிடம் கட்டப்பட்டது
வாலாங் போர் நினைவிடம்.

இங்குள்ள மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.

கஹு கிராமத்தின் ஊராட்சித் தலைவர் கெதி மியோர், அதுபோன்ற சில பிரச்னைகளை பட்டியலிட்டார்.

கெதி மியோர், “வீட்டுக்கு முன்னால், வயல்வெளிக்கு முன்னால், சீன வீரர்கள் தங்கள் வாகனத்தை கொண்டு வந்து நிறுத்துவார்கள். அவர்கள் வந்து நிற்கும் கிராமம் இந்தியாவைச் சேர்ந்தது,” என்கிறார்.

இந்த பகுதி முழுவதும் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ளது. ராணுவ நடவடிக்கைகள் அதிகமாக இருப்பதால், இங்கு வாழும் சிலர் மாறிவிட்ட தங்கள் பகுதி சூழ்நிலைகளை வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.

காஹு கிராமம்
காஹு கிராமம்

இந்த எல்லை கிராமத்தில் பதற்றம் நிறைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

சீனாவின் செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இந்திய அரசு காஹு கிராமத்தை சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. இங்கு தற்போது சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

அரசாங்கமும் இங்கு பெரிய சுற்றுலா விடுதியை கட்டி வருகிறது. விடுதிக்கு அருகில் புதிய ராணுவப் பாலமும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாலத்தின் மேல் பொதுமக்கள் செல்ல முடியாது.

சீனாவின் செயல்பாடுகள் வேகமாக அதிகரித்துள்ளன

சீன ராணுவம் எல்ஏசி முழுவதும் அதன் கண்காணிப்பு கோபுரங்களையும் ராணுவ தளங்களையும் பெரிய அளவில் கட்டியிருப்பதாக தகவல் உள்ளது.

அருணாசலப் பிரதேசத்திற்கு நாம் சென்று இந்த செய்தியை வெளியிடும் பணியில் இருந்தபோது, மாநிலத்தின் சில பகுதிகளில் சீனா சில கிராமங்களையும் அதன் ராணுவ தளங்களையும் கட்டியிருப்பதாக ஒரு தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டது.

இந்திய எல்லையில் இருந்து பல கிலோமீட்டர்களுக்குள் சீனா ஒரு கிராமத்தை கட்டியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

அருணாசல பிரதேசத்தின் புறநகர்ப் பகுதிகளில் சீன வீரர்களின் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் உள்ள மெச்சுகாவின் இந்திய எம்பியான தபீர் காவ்ன், சீன ராணுவ வீரர்களின் செயல்பாடுகள் குறித்து நீண்ட நாட்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறார்.

கிழக்கு அருணாசல பிரதேசத்தின் எம்.பி.யான தபீர் காவ், “சுபன்சிரியில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள், மெக் மோகன் கோடருகே இந்திய பகுதிக்குள் கட்டப்பட்டவை. ஆனால், 1962க்குப் பிறகு, சீன வீரர்கள் தொடர்ந்து அந்த பகுதியை கைப்பற்றினர். அங்குள்ள சீன ராணுவம் அதை ஆக்கிரமித்தது. இந்த ஆக்கிரமிப்புக்கு சாதமாக அவர்கள் நிலச்சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இந்தியா தரப்பிலும் நடவடிக்கை அதிகரித்துள்ளது

அருணாச்சல பிரதேசம்
இந்த பகுதி முழுவதும் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ளது.

எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தவாங், அஞ்சாவ், மெச்சுகா போன்ற பகுதிகளில் இந்தியா கூடுதல் படைகளையும் கனரக ஆயுதங்களையும் நிலைநிறுத்தியுள்ளதாக உள்ளூர்வாசிகள் எங்களிடம் தெரிவித்தனர்.

பாசி காட் எம்.எல்.ஏ நானாங் எரிங் கூறுகையில், “போஃபர்ஸ் துப்பாக்கிகள், ஹோவிட்சர் துப்பாக்கிகள் போல, பல கனரக ஆயுதங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன, முன்பு இரு தரப்புக்கும் இடையே நல்ல உறவு இருந்தது, ஆனால் டோக்லாம் பதற்றத்தால் லடாக்கில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு சீனாவின் அணுகுமுறை மாறியது. படிப்படியாக அவர்கள் இடங்களை கைப்பற்றுகின்றனர்,” என்றார்.

தேசுவிலிருந்து காஹு மற்றும் கிபேடு வரையிலான பயணத்தின் போது, ​​எல்லா இடங்களிலும் சாலைகள் விரிவுபடுத்தப்படுவதைக் கண்டோம்.

கனரக ராணுவ உபகரணங்கள், டிரக்குகள் மற்றும் வீரர்களின் வேகமான செயல்பாடுகளை பார்க்கும்போது, அந்த மலைகள் வழியாக ஒரு புதிய சாலை போடப்படுவதை உணர்ந்தோம்.

இந்த பாதையில் ஏற்கெனவே உள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகின்றன. பழைய பாலங்களுக்குப் பதிலாக டஜன் கணக்கான புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதை அப்பகுதி மக்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

பழைய பாலத்திற்குப் பதிலாக கட்டப்பட்ட புதிய பாலத்தைக் காட்டி, வல்லாங் பகுதியைச் சேர்ந்த லக்கிம் சோபெலாய், “இந்தப் புதிய பாலம் கட்டப்படுவதால், இந்தியாவின் தரப்பில் இருந்து வளர்ச்சி நடப்பதை இன்று என்னால் பார்க்க முடிகிறது. கட்டுமானம் நடக்கிறது,” என்கிறார்.

கடந்த மூன்று மாதங்களாக இங்குள்ள மலைகளில் இந்திய ராணுவம் ஏவுகணைகள், எம்777, ஹோவிட்சர் துப்பாக்கிகள், விமான எதிர்ப்பு கருவிகள், துப்பாக்கிகளை பெரிய அளவில் எடுத்துச் செல்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

இருப்பினும், இதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் அஞ்சாவ், டெபாங் பள்ளத்தாக்கு, சியோமி, அப்பர் சுபன்சிரி மற்றும் தவாங் மாவட்டங்களில் விமான ஓடுதளங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. புதிய ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், மல்டி-பேரல் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் எல்ஏசிக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிந்தோம்.

சீனா அமல்படுத்திய புதிய எல்லை சட்டம்

சீனா இந்தியா பதற்றம்

கடந்த ஆண்டு அக்டோபரில் புதிய எல்லை சட்டத்தை (புதிய எல்லை நிலச் சட்டம்) சீனா நிறைவேற்றியது. இந்த சட்டம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ், சீனாவுடன் எந்த எல்லையில் தகராறு உள்ளதோ, அந்த நிலம் சீனாவின் அதிகார வரம்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் ‘கட்டுமானப் பணிகளை’ மேம்படுத்துவது, கட்டுமானத்திற்கான துணை திறனை வலுப்படுத்துவது போன்றவையும் புதிய சட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அருணாசலப் பிரதேசத்தின் 15 குடியிருப்புப் பகுதிகள், மலைகள் மற்றும் ஆறுகளுக்கு சீனா தமது மொழியில் பெயர் சூட்டியது.

சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா கண்டித்து அந்த பெயர்களை நிராகரிப்பதாக அறிவித்தது. பெயரை மாற்றுவதால் கள யதார்த்தம் மாறாது என்கிறது இந்தியா.

ஆனால் உண்மையில் தமது எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு அணுகுமுறை இந்தியாவின் கவலையை அதிகரிக்கவே செய்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள அசாதாரணமான ராணுவ தயார்நிலை குறித்து பதில் பெற இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினோம். இதுவரை பதில் வரவில்லை.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு, எல்லையில் நிலவும் உறுதியற்ற தன்மையை நிராகரிக்க முடியாது என்று கூறியிருந்தார். இத்தகைய சூழலில்தான் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும் பகுதியாக இந்த இடத்தை இந்திய ராணுவம் அறிவித்து கண்காணிப்பை பலப்படுத்தியிருக்கிறது.

Courtesy: bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here