இந்திய – சீன பதற்றம்: அமெரிக்காவால் இந்தியாவுக்கு எவ்வாறு உதவ முடியும்?

0
66

அக்டோபர் 12ம்தேதி இந்தியாவும் சீனாவும் முக்கிய தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்தியது. கிழக்கு லடாக்கின் சுஷுல் நகரில் நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக் பகுதியில் இருந்து சீனாவின் மக்கள் விடுதலைப் படையை (பிஎல்ஏ) முழுமையாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. ஆனால், அந்த உரையாடலினால் எந்த விளைவும் ஏற்படவில்லை.

கடந்த சில மாதங்களாக இந்தியா- சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது.

சீனா இப்போது எல்லைஅருகே ஒரு நிரந்தர கட்டமைப்பை உருவாக்கி வருவதாக அமெரிக்கா கூறுகிறது. இதே சமயம் எல்லை பகுதிகளில் இந்தியா கட்டுமானப் பணிகளை செய்து வருகிறது என்று சீனா குற்றம்சாட்டுகிறது.

இதன் அர்த்தம், எல்.ஏ.சி (மெய்யான கட்டுப்பாட்டுக்கோடு) கூட இப்போது இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே உள்ள எல்ஓசி எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு போல ஆகலாம், அங்கு இரு தரப்பிலும் நிரந்தர ராணுவ சாவடிகள் உள்ளன.

பாதுகாப்பு நிபுணர்களின் பயம்

ஏப்ரல்-மே மாதத்திலிருந்து இரு நாடுகளிலும் இருந்து சுமார் 50,000 துருப்புக்கள் அங்கே உள்ளன. சில இடங்களில், இரு இராணுவங்களுக்கு இடையிலான இடைவெளி 200 கெஜத்திற்கும் குறைவாக உள்ளது. ஒரு சிறிய தேவையற்ற சம்பவம் கூட ஒரு பெரிய ராணுவ மோதலாக மாறும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்கா, இந்தியாவுக்கு உதவி செய்வதாக தொடர்ந்து யோசனை கூறி வருகிறது.

“அவர்கள் (இந்தியா) சீனாவுடனான மோதலில் அமெரிக்காவை சேர்ப்பது அவசியம்,” என இந்தியா சீனா இடையேயான பதற்றங்கள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ கூறினார்.

அது மட்டும் அல்லாமல், இந்த மாதம் 26-27 ஆம் தேதி, பாதுகாப்பு அமைச்சர் மார்க் அஸ்பரும், மைக் பாம்பேயோவும் தங்களின் இந்திய சகாக்களுடன் வருடாந்திர உரையாடலுக்காக டெல்லி வரவிருக்கிறார்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே 2+2 என்ற வகையில் இந்த ஆண்டு கூட்டத்தில், இந்தியாவுக்கு உதவி அளிப்பது பற்றி பேசப்படும் என்றும் நம்பப்படுகிறது.

இந்திய அமெரிக்க உறவுகள்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் ஆழமானவை, பாதுகாப்பு துறையில் பரிமாற்றங்கள் அண்மை ஆண்டுகளில் மேலும் வளர்ந்துள்ளன.

மறுபுறம், பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான தனிப்பட்ட நட்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில், ஒரு சில ஆண்டுகளாக உணரப்படாத ஒரு விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஆனால், பழைய பழமொழிபோல், வெளிநாட்டுக் கொள்கைகள், தேசிய நலன் கருதியே தீர்மானிக்கப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு இந்தியா இதுவரை அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கவில்லை

ஆனால் மோதி அரசு அமெரிக்காவின் யோசனையை நிராகரிக்கவும் இல்லை.

இந்தியாவை குவாட் நாடுகள் (அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட) போன்ற பிராந்திய தளங்களில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சீனா மீது அழுத்தம் கொடுக்க இது ஒரு சிறந்த வழியாக தெரிகிறது.

இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா என்ன செய்யமுடியும்?

இப்போது கேள்வி, இந்தியா தயாராக இருந்தால், அமெரிக்காவால் என்ன வகை உதவியை வழங்க முடியும்?

டாக்டர் நிதாஷா கவுல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் இணை பேராசிரியராகவுள்ளார்.

“அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஒரு முரண்பாடான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது மற்றும் டிரம்ப் உலகளாவிய அளவில் அமெரிக்காவின் உறுதிப்பாடுகளை குறைத்து வருகிறார். அதனால் டிரம்ப் நிர்வாகத்தின் வாய்மொழி அறிக்கைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை,” என்று அவர் கூறுகிறார்.

“அமெரிக்கா அதிகபட்சமாக ராணுவ உளவுத்துறை மற்றும் பயிற்சி போன்ற பிரிவுகளில் உதவ முடியும்,” என்று அவர் கூறுகிறார். “அதே நேரத்தில், பதற்றத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கான அறிகுறியையும் சமிக்ஞைகளை அமெரிக்கா சீனாவிற்கு அனுப்புகிறது,”

அமெரிக்கவின் ஜோசப் ஃபெல்டர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவர் ஆய்வு நிறுவனத்தில் தெற்காசியாவிற்கான நிபுணராக உள்ளார்.

“இந்திய-அமெரிக்க உறவு வலுவடைய வேண்டும் என நான் உறுதியாக நம்புகிறேன், ஆனால் நாங்கள் (அமெரிக்கா) இந்தியாவிற்கு இன்னும் அதிகமாக செய்ய வேண்டும்,” என்று அவர் சமீபத்திய ’வெப்பினார்’ ஒன்றில் கூறினார். “இந்தியா நமது பாதுகாப்பு க் கூட்டாளியாக உள்ளது. ராணுவ உதவி, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு த் துறையில் இந்தியாவுக்கு உதவுவதற்கு இதைவிட சிறந்த சூழ்நிலை ஒருபோதும் இருந்ததில்லை.” என்கிறார் அவர்.

அமெரிக்காவை இந்தியா நம்பலாமா?

இந்திய வம்சாவளியினரான அசோக் ஸ்வைன், ஸ்வீடனின் உப்சலா பல்கலைக்கழகத்தில் போர் மற்றும் அமைதி குறித்த ஆராய்ச்சித் துறை பேராசிரியராகவுள்ளார். அவரது கருத்துப்படி, இந்தியா அமெரிக்காவை நம்பக்கூடாது.

“இந்தியா அமெரிக்காவுடன் நல்ல உறவுகளை கொண்டிருக்க வேண்டும், ஆனால் அது சீனாவுக்கு எதிராக இருக்கக்கூடாது, இந்தியா, பாகிஸ்தானின் கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்ள வேண்டும், மற்றவர்களிடமிருந்து அல்ல, அமெரிக்கா ஒருபோதும் ஒரு விசுவாசி-தகுதியுள்ள கூட்டாளியாக இருந்ததில்லை, மேலும் டிரம்ப் ஆட்சியின் கீழ் இன்னும் அது வெளிப்படையாகி வி ட்டது.”

டாக்டர் நிதாஷா கௌலின் கருத்தும் இதே தான். “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையின்கீழ், அமெரிக்கா உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரு நம்பகமான கூட்டாளியாக நிரூபிக்கப்படவில்லை,” என்று அவர் கூறுகிறார்.

பேராசிரியர் அசோக் ஸ்வைனின் கருத்துப்படி, சீனாவுடனான எல்லை மோதல்களை எதிர்கொள்ளும் போது, இந்தியாவின் ராணுவத்திற்கு அமெரிக்கா உதவாது.

“டிரம்ப் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது மற்றும் அது எவ்வளவு நம்ப முடியாததாக இருக்கிறது என்பதை சீனா நன்கு அறியும். ஒரு ராணுவ மோதல் இருந்தால், அமெரிக்கா வெளிப்படையாக இந்தியாவுடன் சேரும், என்பதற்கு அதிக சாத்தியமில்லை.” என்கிறார் அவர்.

போர் அச்சம் உள்ளதா?

கல்வான் பள்ளத்தாக்கில் மோதல்கள் மிகக் குறைவாக இருந்தன, ஆனால் எல்லையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போர் பற்றிய அச்சங்கள் இல்லை என்பதை மறுக்க முடியாது .

இந்திய பாதுகாப்பு படைத்தளபதி ஜெனரல் விபின் ராவத் கடந்த மாதம் கூறுகையில், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், இந்திய தரப்பில் இருந்து சீன ராணுவத்தை அகற்றுவது, ராணுவத்தின் ஒரு யோசனையாக இருக்கும் என்று கூறினார்.

மறுபுறம், ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு பத்திரிகையான குளோபல் டைம்ஸ், சமீபத்தில் தலைப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டது, அதில் “இந்தியாவிடமிருந்து சமாதானத்திற்கும் போருக்கும் சீனா தயாராக உள்ளது,” என்பதே அது.

சீனாவில் தெற்காசிய விவகாரங்களில் வல்லுனரான பேராசிரியர் ஹுவாங் யுன்சாங், சீனா பொறுமையாக வேலை செய்து வருகிறது என்கிறார். ஆனால் அவரைப் பொறுத்தவரை அதற்கு ஒரு எல்லை உள்ளது.

“இரு நாடுகளின் விஷயத்தில் எந்த மூன்றாம் தரப்பும் தலையிடுவதை சீனா விரும்பவில்லை,” என்று அவர் கூறுகிறார். அமெரிக்கா இந்தியாவை சுயநலத்திற்காக பயன்படுத்த விரும்புகிறது. இந்தியாவின் தோளில் துப்பாக்கியை வைத்து சீனாவை குறி வைக்க அமெரிக்கா விரும்புகிறது. இந்தியா போர் எனும் தவறை செய்யாது, அமெரிக்காவின் பேச்சில் மயங்காது என்று நாங்கள் நம்புகிறோம்”.

உண்மையில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் நாட்டின் மற்ற அரசியல் தலைவர்கள் சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும், போர் அல்ல என்று வலியுறுத்தினர்.

சீனா தனது படைகளை இந்தியாவின் நிலத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்து இந்தியாவில் நிலவுகிறது.

இந்தியாவின் அரசியல், அரசு மற்றும் இராஜதந்திர துறைகள் அமெரிக்காவிடமிருந்து இராணுவ உதவியை நாட விரும்பவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது மோடியின் பலவீனமாக பார்க்கப்படும். ஆனால் அதைவிட, சீன எல்லையில் அமெரிக்கா கூடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை.

கடந்த 70 ஆண்டுகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் வரலாற்றில் , பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை மற்றும் பல தசாப்தங்களாக பிரச்னைகள் தொடர்ந்து வருகின்றன என்பது தெளிவாகிறது . 1950ல் கொரியபோர், வியட்நாம் போர், அரபு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான போர் போன்றவை அதற்கு சில உதாரணங்கள்.

LAC-ல் இருந்து சீன படையினரை விலக்க என்ன வழி?

பிபின் ராவத்தின் ராணுவத்தின் முன் உள்ள வழிகள் தொடர்பான அறிக்கையை தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவும் சீனாவும் கடந்த மாதம் ஒரே விருப்பத்தைக் கொண்டிருந்தனர், அது இராஜதந்திர பாதை என்று தெரிவித்தார்.

“ராஜ தந்திரத்தின் மூலம் நிலைமையை தீர்க்க வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன், அதைத்தான் நான் முழு பொறுப்புடன் சொல்கிறேன்,” என்று அவர் கூறினார்.

சீனா பின் வாங்குமா?

பேராசிரியர் அசோக் ஸ்வைன், இது இப்போது கடினம் என்கிறார். “இந்தியவுக்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்க போவதில்லை. குளிர்காலத்தில் இந்தியாவின் பொறுமையை சீனா சோதிக்கும், ஆனால் அமெரிக்காவுடன் ஒரு கூட்டணி என்பது சீனாவை பயமுறுத்தும் என்று இந்தியா நம்புகிறது.”

டாக்டர் நிதாஷா கௌலின் பார்வையில், எல் ஏசி யில் தொடர்ந்து பத்தற்றம் நிலவுவது இந்தியாவின் நலன் அல்ல. சீனாவின் பலத்தை கருத்தில் கொண்டு, இந்தியா உணர்வுகளுடன் விளையாடுவதை தவிர அதிகம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், “லடாக் போன்ற தொலைதூர பகுதிகளில், மக்களின் நினைவாற்றல் பெரும்பாலும் பலவீனமாக உள்ளது. மோடியின் வலு ஊடகத்தின் கட்டுப்பாட்டின் அடிப்படையில் உள்ளது மற்றும் LAC மீதான பதற்றம் பற்றிய செய்திகளை தலைப்புச் செய்திகளில் இருந்து அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கலாம் .”

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவருமே வலுவான தலைவர்கள் இந்த விவகாரத்தில் நம்பகத்தன்மையை கொண்டுள்ளனர் என்று சீனா மற்றும் இந்திய விவகாரங்கள் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். யாராவது பின்வாங்கத் தயாராக இருந்தால், அது ஒரு பலவீனமாக அல்லது ஒரு தோல்வியாகக் கருதப்படலாம்.

சீனா மற்றும் பாகிஸ்தான்

அதனால்தான், பேச்சுவார்த்தை என்பதுதான் ஒரே வழியாக இருக்கும், இதற்கான வாய்ப்புகளும் இன்னும் உள்ளது . முக்கிய தளபதி மட்டத்தில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் வெற்றி ஏதும் இல்லை என்றால், தலைவர்களிடையே முறையான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்படலாம்.

குவாண்டை விட தெற்காசியா மற்றும் அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த அரசு வலியுறுத்துவது நல்லது என்று இந்திய அரசுக்கு பேராசிரியர் அசோக் ஸ்வைன் யோசனை கூறுகிறார். “இந்தியா இவ்வாறு , சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள கூட்டணியை உடைக்க உதவலாம் ” என்று அவர் கூறுகிறார்.

தற்போது எல்லையில் தேக்க நிலை நிலவுகிறது , இரு தரப்பினரும் நேருக்கு நேர் உள்ளனர். இரு நாட்டு எல்லை மக்களும், மோடி-ஷி ஜின்பிங் மாநாடு விரைவில் நடைபெறும். இதனால் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ரஷ்யாவில் நவம்பர் 17ம் தேதி நடைபெறும் பிரிக்ஸ் கூட்டத்தில் இரு தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த சந்திப்பு மெய்நிகர்(வர்சுவல்) சந்திப்பாக இருக்கும். இந்த மாநாட்டின் போது இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும். ஆனால் நிபுணர்கள் இது பற்றி இப்போது எதுவும் சொல்ல கடினம் என்று கூறுகின்றனர்.

நன்றி : பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here