இந்திய சினிமாவில் பாகுபலி ஏன் முக்கியமான திரைப்படம்? – ஓர் அலசல்

0
231

இந்தியாவில் தயாரான சினிமாக்களில் பாகுபலி 2 படமே அதிகபட்சம் வசூலித்துள்ளது. உலக அளவில் இந்திய சினிமாவை பாகுபலி 2 திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

அனைவருக்கும் தெரிந்த இந்த விஷயங்களை ஒதுக்கி வைத்து பேசுவோம். பாகுபலியின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள் இந்திய சினிமாவுக்கு எந்தவகையில் முக்கியமானவை?

இதையும் பாருங்கள்: சுக்மா: மாவோயிஸ்டுகள் 9 பேர் கைது

இந்த கேள்வியை சரியாக புரிந்து கொள்ள உலக அளவில் வசூல் செய்த படங்களையும், இந்திய அளவில், மாநில அளவுகளில் அதிகம் வசூல் செய்த படங்களையும் தெரிந்து கொள்வது அவசியம். முதலில் உலக அளவில்.

இதையும் பாருங்கள்: விவசாயிகளைத் தாக்கிய பசுக் காவலர்கள்; தொடரும் அராஜகம்

1. அவதார் – 2,788 மில்லியன் டாலர்கள்
2. டைட்டானிக் – 2,186.8 மில்லியன் டாலர்கள்
3. ஸ்டார் வார்ஸ் – தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் – 2,068.2 மில்லியன் டாலர்கள்
4. ஜுராஸிக் வேர்ல்ட் – 1,671.7 மில்லியன் டாலர்கள்
5. மார்வெல்ஸ் தி அவெஞ்சர்ஸ் – 1,518.8 மில்லியன் டாலர்கள்
6. ஃப்யூரியஸ் 7 – 1,516 மில்லியன் டாலர்கள்
7. அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் அல்ட்ரான் – 1,405.4 மில்லியன் டாலர்கள்
8. ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோவ்ஸ் பார்ட் 2 – 1,341.5 மில்லியன் டாலர்கள்
9. ஃப்ரோஸன் – 1,276.5 மில்லியன் டாலர்கள்
10. அயன் மேன் 3 – 1,214.8 மில்லியன் டாலர்கள்

ஒரு மில்லியன் என்பது பத்து லட்சங்கள். ஒரு டாலர் சுமாராக 64 ரூபாய். அவதாரின் 2,788 மில்லியன் டாலர்கள் என்பது சுமாராக பதினெட்டாயிரம் கோடிகள்.

இந்தியில் அதிகம் வசூலித்த படங்களைப் பார்ப்போம்.

1. தங்கல் – 387.38 கோடிகள்
2. பிகே – 340.8 கோடிகள்
3. பஜ்ரங்கி பைஜான் – 320.34 கோடிகள்
4. சுல்தான் – 300.45 கோடிகள்
5. தூம் 3 – 284.27 கோடிகள்
6. க்ரிஷ் 3 – 244.92 கோடிகள்
7. கிக் – 231.85 கோடிகள்
8. சென்னை எக்ஸ்பிரஸ் – 227.13 கோடிகள்
9. பிரேம் ரத்தன் தான் பயோ – 210.16 கோடிகள்
10. 3 இடியட்ஸ் – 202.95 கோடிகள்

தமிழில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலை எடுத்தால் எந்திரன், சிவாஜி, விஸ்வரூபம், தெறி, துப்பாக்கி என்று இருக்கும். மலையாளத்தில் புலிமுருகன், த்ரிஷ்யம்… அப்படியே தெலுங்கு கன்னடத்திலும்.

இந்திய சினிமாவுக்கும், உலக அளவில் அதிகம் வசூலித்த சினிமாக்களுக்குமிடையில் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்று உள்ளது. இந்திய சினிமாவில் – அது எந்தமொழிப் படமாக இருந்தாலும் முதலிடத்தைப் பிடித்திருக்கும் படங்கள் அனைத்தும் மாஸ் ஹீரோக்கள் நடித்தது. அவர்கள் நடித்ததால் மட்டுமே அப்படங்கள் முன்னணி இடத்தைப் பிடித்தன. இந்தியை எடுத்துப் பார்ப்போம். சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான் மூவருமே நிறைந்திருக்கிறார்கள். க்ரிஷ் 3 இன்னொரு மாஸ் ஹீரோ ஹிர்த்திக் ரோஷன் நடித்தது. எந்திரன், சிவாஜி, விஸ்வரூபம், தெறி, துப்பாக்கி எல்லாம் மாஸ் ஹீரோக்கள் நடித்ததே.

உலக அளவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களை பார்ப்போம். டாம் க்ரூஸ், பிராட் பிட் போன்ற ஹாலிவுட் நாயகர்களின் படங்கள் ஒன்றுகூட இல்லை. அவதார், டைட்டானிக் இரண்டும் ஜேம்ஸ் கேமரூனின் பிரமாண்டத்துக்காகவும், இயக்கத்துக்காகவும் ஓடியவை. நடிகர்கள் இதில் முக்கியமில்லை. காமிக்ஸ் புத்தகங்கள் மூலம் பிரபலமான கதைகள் படமாக்கப்படுகையில் உலக அளவில் கவனம் பெறுகின்றன. இங்கும் நடிகர்கள் இரண்டாம்பட்சமே. ஒரு படம் பல பாகங்கள் வெளிவரும் போது இயல்பாகவே அவற்றின் மீது ஓர் ஈர்ப்பு உருவாகிறது. ஃப்யூரியஸ் 7 இந்தப் பட்டியலில் இடம்பிடிக்க அதுவே காரணம். இந்த சீரிஸ் தவிர்த்து வின் டீசல் நடித்த ஒரு படம்கூட டாப் 100 பட்டியலில் இல்லை என்பதையும் கவனிக்கவும்.

இந்தியாவுக்கு வெளியே இயக்குனர்களும், கதைகளுமே பிரதானமாக பார்க்கப்படுகிறார்கள். நடிகர்கள் இரண்டாம்பட்சமாகவே உள்ளனர். இந்தியாவில் முதல்முறையாக பாகுபலி படம் நடிகர்களை இரண்டாம்பட்சமாக்கி தயாராகியிருக்கிறது. பாகுபலி அதில் நடித்த பிரபாஸுக்காகவோ, ராணாவுக்காகவோ ஓடவில்லை. அவர்களின் கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகரை நடிக்க வைத்திருந்தாலும் ஓடியிருக்கும். பாகுபலியை ஓட வைத்ததும், அதன் அச்சாணியாக திகழ்வதும் இயக்குனர் ராஜமௌலியே. இது ராஜமௌலிக்கும் தெரியும். அதனால்தான் அவர் பாகுபலிக்கு மாஸ் நடிகரின் பின்னால் செல்லாமல் பிரபாஸ் போன்ற இரண்டாம்கட்ட நடிகரை தேர்வு செய்தார். இதுவே ரஜினியோ, சிரஞ்சீவியோ நடித்திருந்தால் என்னவாகியிருக்கும்? ராஜமௌலியின் பெயர் இந்தளவு கொண்டாடப்பட்டிருக்குமா?

நடிகர்களின் பின்னால் சென்று கொண்டிருந்த இந்திய சினிமாவின் லகானை தன்னை நோக்கி – இயக்குனர்களை நோக்கி செலுத்தியிருக்கிறார் ராஜமௌலி. மாஸ் நடிகரின் பங்களிப்பு இல்லாமல் அதிகபட்ச வசூல் இல்லை என்பதை பாகுபலி மூலம் மாற்றி எழுதியிருக்கிறார். நடிகர்கள் இரண்டாம் பட்சமாகி இயக்குனர்களும், கதைகளும் முன்னிலை பெறுவது எந்த சினிமாவுக்குமே ஆரோக்கியமானது. பாகுபலி அதனை மறுக்க முடியாத வெற்றியுடன் சாதித்திருக்கிறது. பாகுபலி வழியில் தொடர்ந்து படங்கள் வருவது இந்திய சினிமாவில் நிலைபெற்றுப் போன நடிகர்களின் ஆதிக்கத்தை குறைக்கும்.

இதையும் பாருங்கள்: பதினெட்டாவது அட்சக்கோடு : வன்முறைகளும் மனித மாண்புகளும் விலகும் புள்ளி..

இதையும் பாருங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்

இதையும் பாருங்கள்: ஆட்சி

இதையும் பாருங்கள்: என்.டி.ஆர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்