தெலுங்கில் வெளியாகும் துல்கர் சல்மானின் தமிழ்ப்படம்

துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய தமிழ்ப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என பெயர் வைத்துள்ளனர். மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற புகழ்ப்பெற்ற பாடலின் வரிகள் இவை. துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். திருடா திருடா படத்தின் தெலுங்குப் பதிப்பில் இடம்பெற்ற பாடலை படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்கள். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்க உள்ளனர்.

தமிழில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடித்த படம்

2013 இல் வெங்கடேஷ், மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பேமிலி என்டர்டெயினர்  சீதாம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு. இதில் மகேஷ்பாபு ஜோடியாக சமந்தாவும், வெங்கடேஷ் ஜோடியாக அஞ்லியும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தமிழ் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. ஆனால் அது கைகூடவில்லை. படம் வெளியாகி ஆறு வருடங்கள் கழிந்த நிலையில் அதனை தமிழில் மொழிமாற்றம் செய்து நெஞ்சமெல்லாம் பலவண்ணம் என்ற பெயரில் வெளியிடுகின்றனர். ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டியர் காம்ரேட் படத்தின் வசூல் நிலவரம்

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்த டியர் காம்ரேட் சென்றவாரம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியானது. தெலுங்கு மாநிலங்களில் படம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. கர்நாடகாவில் படம் முதல் நாளில் 1.24 கோடியும், இரண்டாவது நாளில் 48 லட்சங்களும் வசூலித்துள்ளது. முதல் இரு தினங்களில் கர்நாடக வசூல் 1.72 கோடி. கேரளாவில் முதல்நாளில் 80 லட்சங்களும், இரண்டாவது நாளில் 33 லட்சங்களும் வசூலித்துள்ளது. மொத்தம் 1.13 கோடி. சென்னையில் இந்தப் படம் முதல் இரு தினங்களில் 32 லட்சங்களை வசூலித்துள்ளது. டியர் காம்ரேட்டின் வசூல் அனைத்து இடங்களிலும் இரண்டாவது நாளில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளதை பார்க்கலாம். வார நாள்களில் படம் தாக்குப் பிடிக்குமா என்பது கேள்விக்குறி.

இந்தியில் ஹிர்த்திக் ரோஷனுடன் நடிக்கும் தனுஷ்

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் தனுஷ். அடுத்து அமிதாப்புடன் ஷமிதாப். நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியில் நடிக்கிறார். அவரது முதல்பட இயக்குநர் ஆனந்த் எல்.ராயே இந்தப் படத்தையும் இயக்குகிறார். தனஷுடன் ஹிர்த்திக் ரோஷன், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர இந்தியின் முக்கியமான நட்சத்திரங்கள் சிலரும் நடிக்க உள்ளனர். கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.