அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் சிலவற்றுக்கு இந்தியா விதித்துள்ள புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள அதிபர் டிரம்ப், இந்தியா அதனை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமையை திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூன் மாதத் தொடக்கத்தில் 28 அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா புதிய வரிகளை விதித்தது.

இன்று ஜப்பானின் ஒசாகாவில் ஜி20 மாநாடு தொடங்க உள்ள நிலையில், இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளார்.

ஜப்பானுக்கு புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “பல்வேறு நாடுகளும் அமெரிக்காவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இனி அது நடக்காது,” என்று கூறினார்.

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்த ட்வீட், இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பையோ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட அறிக்கைக்கு முரணாக இருந்தது.

அந்த அறிக்கையில் “நல்ல நண்பர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு இருக்கும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்திய அமெரிக்க இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 2018ஆம் ஆண்டு 142 பில்லியன் டாலர்களாக இருந்தது. 2001ஆம் ஆண்டு இருந்ததைவிட இது ஏழு மடங்கு அதிகமாகும்.

அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமையை இந்தியா இழந்துவிட்டதால், முன்பு அமெரிக்காவில் வரி விலக்கு பெற்றிருந்த 5.6 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஏற்றுமதி பொருட்கள் பாதிப்புக்குள்ளாகும்.

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அலுமினியம் மற்றும் எஃகு ஆகியவற்றுக்கான வரிகளை அமெரிக்கா உயர்த்தியதை அடுத்து, சில பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை இந்தியா உயர்த்தியது.

இரானிடம் எண்ணெய் வாங்கினால் மற்றும் ரஷ்யாவின் S-400 ஏவுகணைகள் வாங்கும் முடிவை கைவிடவில்லை என்றால், இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here