(மார்ச் 9 ஆம் தேதி வெளியான செய்தி. மறுபிரசுரமாகிறது)

புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்த போது கார்பெட் பூங்கா படப்பிடிப்பு முதல் , அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்ட போது பிரச்சாரம் வரை – மோடி என்ன செய்து கொண்டிருந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் சூழலில் நாட்டு மக்கள் பதைபதைப்புடன் இருந்த சமயத்தில், பிரதமர் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்?  புல்வாமா தாக்குதல் நடந்த பின், சில மணிநேரங்கள் வரை படப்பிடிப்பில் இருந்தார்.  இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

இந்திய மக்கள் 2 வார காலமாக உளவுத் துறையின் தோல்வியினால் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையும், அதன் பின் நடந்த பாலகோட் விமானத் தாக்குதலையும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். போர் மூளும் சூழலில் நாட்டு மக்கள் பதைபதைப்புடன் இருந்தனர். இந்திய தொலைக்காட்சிகளின் செய்தி தொகுப்பளர்கள், பாஜக அரசின் பிரதிநிதிகளாக செயல்பட்டனர். பாலகோட் தாக்குதல் குறித்து வேண்டுமென்றே மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கூறினர். இந்தியா கூறியதை பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், பிரதமரோ அல்லது தொடர்புடைய அமைச்சர்களோ எதுவும் பேசவில்லை.
இந்த இரண்டு வாரங்களிலும் மோடி என்ன செய்துகொண்டிருந்தார்.

பிப்ரவரி 14

தேசிய பாதுக்காப்பு சூழல்: புல்வாமாவில் லெத்போரா அருகே மாலை 3.15 மணியளவில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில்  40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  புல்வாமாவில் தாக்குதல் நடந்த போது உத்தரகாண்ட், கார்பெட் தேசிய பூங்காவில் ஆவணப்படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தார் மோடி.  உள்ளூர் பத்திரிகைகளில் வந்த செய்திபடி மோடி தேசிய பூங்காவில் 6.40 மணி வரை, அதாவது புல்வாமா தாக்குதல் நடந்து 3 மணி நேரத்துக்குப் பிறகும் அங்கேயே இருந்திருக்கிறார். மோடி பூங்காவில் இருந்தது குறித்து பல்வேறு செய்திகள் வெளியானது .

பிப்ரவரி 15

தேசிய பாதுகாப்பு சூழல்: தாக்குதலுக்கு மறுநாள், வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய புலனாய்வு நிறுவனத்துடன் புல்வாமா சென்றார். தீவிரவாதத்துக்கும் ஜெய்ஸ் இ முகமது அமைப்புக்கும் ஆதரவாக பாகிஸ்தான் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மிகவும் ஆதரவான நாடுகள் என்ற பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கியது இந்தியா.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது என உத்தரபிரதேசம், ஜான்சியிலிருந்து புல்வாமா தாக்குதல் குறித்து மோடி தனது முதல் கருத்தை தெரிவித்தார்.

மேலும், ஜான்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் பேசினார்.


வந்தே பாரத் என்ற ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அன்றைய நாள் மாலையில் , டெல்லியில் பிரதமர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிப்ரவரி 16

தேசிய பாதுகாப்பு சூழல்: டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தில் பாதுகாப்புப் படைகளுடன் உறுதுணையாக நிற்போம் என்று அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் இயற்றியது. இந்திய விமானப்படை தலைவர், இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறினார்.

உலக நாடுகளின் ஆதரவை இந்தியா பெறத் துவங்கியது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்குள்ள தற்காப்பு உரிமையை ஆதரித்தார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், இந்துத்துவ அமைப்புகள் காஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது . ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் ஜம்முவில் கலவரம் நடந்தது.

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200% வரியை உயர்த்தியது இந்தியா.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி இருந்தார். அவர் படையினருக்கு உறுதுணையாக இருப்பதை தெரிவிக்க கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

துலே என்ற இடத்தில் நீர்ப்பாசன திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார் மோடி. பின்பு ஜல்கான் உதானா ரயில் திட்டத்தையும், ஒரு ரயிலையும் தொடங்கிவைத்தார் மோடி. இரண்டு ரயில் பாதைகளுக்கான அடிக்கல் நாட்டி விட்டு, பெண்கள் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார் .

பிப்ரவரி 17

தேசிய பாதுகாப்பு சூழல்:  ஐந்து பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை அன்று விலக்கிக் கொண்டது. காஷ்மீரி மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது மேலும் ஜெய்ப்பூரில் 4 மாணவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ கைது செய்தார்கள் .

பாலிவுட்டின் சினிமா தொழிலாளர் அமைப்பு, பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்திய படங்களில் பணிபுரிய தடை விதித்தது.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: பிரதமர் ஜார்க்கண்ட் , பீகார் மாநிலங்களுக்குச் சென்றார். ராஞ்சியில் அயூஷ்மான பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட பயனாளிகளுடன் உரையாடினார்.

ஹசரிபாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த மோடி , பரவுனியில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிப்ரவரி 18

தேசிய பாதுகாப்பு சூழல்:  புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்ததாக அப்துல் ரசீது காசி – யை இந்தியப் படை சுட்டுக் கொன்றது. இந்தத் தாக்குதலின்போது ராணுவ மேஜர் , 5 படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் மவுரிசியோ மார்சியுடன் அன்றைய பொழுதை கழித்தார் மோடி. இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர். அர்ஜெண்டினா கலாச்சார இணக்கத்துக்கான தாகூர் விருதை அளித்தார் பிரதமர் மோடி.

சிவ சேனா – பாஜக கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டதை மிகுந்த மகிழ்ச்சியோடு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் மோடி.

பிப்ரவரி 19

தேசிய பாதுகாப்பு சூழல்: 100 மணி நேரத்துக்குள் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைமையை காஷ்மீரில் அழித்ததாக இந்திய ராணுவம் கூறியது .
இந்தியா இராணுவ தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இருமுறை சிந்திக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது முதல் கருத்தை கூறினார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  வாரணாசியில் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் மருத்துவமனையையும் தொடங்கி வைத்தார்.

புது டெல்லிக்கு திரும்பிய அவர், பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி பாகிஸ்தானிலிருந்து வந்த சவுதி பட்டத்து இளவரசரை வரவேற்க நேரில் சென்றார்.  அவரி கட்டித்தழுவி உற்சாக வரவேற்பு கொடுத்தார்.

பிப்ரவரி 20

தேசிய பாதுகாப்பு சூழல்: உலகத் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐநாவின் மனித உரிமைகளுக்கான தலைவர் மிச்சல் பச்சேலெட்   உள்ளிட்ட பலர் புல்வாமா தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தானியர் ஒருவர் மற்ற கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இது புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நடக்கவில்லை என அதிகாரிகள் சொன்னபோதும், தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக செய்திகள் தெரிவித்தது.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: சவுதியின் பட்டத்து இளவரசருடன் அந்த நாளைக் கழித்தார் பிரதமர். இருநாட்டு தலைவர்களும் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். பின்னர், மோடி தென் கொரியாவுக்கு கிளம்பினார்.

பிப்ரவரி 21-22

தேசிய பாதுகாப்பு சூழல்: நிதின் கட்கரி தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி அரசு பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த முடிவு செய்திருப்பதாக அறிவித்தார்.

ஏதேனும் ஆக்கிரமிப்பு அல்லது மீறல் முயற்சிகள் நடந்தால் தக்க பதிலடி கொடுக்க பாகிஸ்தான் இராணுவத்துக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பதாக இம்ரான் கான் வெளிப்படையாக தெரிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: சியோல் சென்ற மோடி இந்திய சமூகத்தினரிடையே பேசினார். யோன்சேய் பல்கலைக்கழகத்தில் காந்தியின் உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்திய-தென்கொரிய வர்த்தக அமைப்பினரிடையே உரையாற்றினார். மேலும் சமாதானத்துக்காக சியோல் சமாதான பரிசைப் பெற்றார்.

பிப்ரவரி 23

தேசிய பாதுகாப்பு சூழல்: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியை சேர்ந்த யாசின் மாலிக் மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய வீடுகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பிரிவினைவாத தலைவர்கள் குறித்து பல்வேறு செய்திகள் ஜம்மு , காஷ்மீரில் பரவின.

பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா அச்சுறுத்தலாக இருப்பதாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் எழுதியது. இந்திய-பாகிஸ்தான் நிலைமை மிகவும் அபாயகரமாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய உலக வர்த்தகர்கள் மாநாட்டில் மோடி பேசினார். ராஜஸ்தான் மாநிலம் டோங்கில் நடந்த பாஜக தேர்தல் பேரணியில் பேசினார். இங்கே, இறுதியாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட காஷ்மீரி மாணவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து தனது மவுனத்தை உடைத்தார். நாம் காஷ்மீருக்காக போராட வேண்டுமே தவிர, காஷ்மீரிகளை எதிர்த்து அல்ல என்றார் மோடி.

பிப்ரவரி 24

தேசிய பாதுகாப்பு சூழல்: அமைதிக்கான வாய்ப்பைக் கொடுங்கள் என மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்கிறார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதமரின் கிஷான் திட்டத்தை தொடங்கிவைத்தார். பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் நீராடிய பிறகு , சுவாச் கும்ப் , சுவாச் அப்ஹார் என்ற நிகழ்ச்சியில் பேசினார்.

அதோடு, மிகப் பெரும் அளவிலான டிஜிட்டல் (வீடியோ) கன்பரன்ஸ் வழியாக பேசலாம் என்று அறிவித்த மோடி, தேர்தல் பரப்புரை வாசகம் ஒன்றையும் டிவிட்டரில் பதிவிட்டார்.

பிப்ரவரி 25

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  இருவேறு நிகழ்ச்சிகளில் மோடி பேசினார். ஒன்று ரைசிங் இந்தியா சம்மிட். மற்றொன்று தேசிய போர் நினைவேந்தல் நிகழ்ச்சி. இரண்டு நிகழ்ச்சிகளிலும் பேசிய மோடி தொடர்பே இல்லாதவகையில் காங்கிரசை தாக்கி பேசியது சர்ச்சைகளை உருவாக்கியது.

நியூஸ் 18 நடத்திய ரைசிங் இந்தியா சம்மிட்-ல் பேசிய மோடி தனது அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

பிப்ரவரி 26

தேசிய பாதுகாப்பு சூழல்:  எல்லையை மீறி நடத்தப்பட்ட பாலகோட் விமான தாக்குதல் இந்தியாவுக்குள்ளும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயும் பதட்டத்தை உண்டாக்கியது.  வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே, இந்திய விமானப்படை தாக்குதலை உறுதி செய்தார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பெரிய அளவிலான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த கமாண்டர்கள், ஜிகாதிகள் அழிக்கப்பட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பெரிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடுகள் போர்நிறுத்த மீறல்களும் நடக்கத் தொடங்கின.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் மோடி பேசினார். 2014-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பிரச்சார ஸ்லோகனை மேற்கோளிட்டு பேசினார். ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசை பல்வேறு முறை தாக்கிப் பேசினார்.

அன்றை தினம் டெல்லியில் இஸ்கான் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் உலகின் மிகப் பெரிய பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்தார்.  டெல்லி மெட்ரோவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

பிப்ரவரி 27

தேசிய பாதுகாப்பு சூழல்: புதன்கிழமை பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் இந்திய வான்வெளிக்குள் வந்து, திறந்தவெளியில் தாக்குதலை நடத்தியது. ஒரு வான்வழி சண்டையில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் சிக்கினார்.

பிரதரின் நிகழ்ச்சி நிரல்:  தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் மோடி கலந்துகொண்டு பேசினார். பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துரையாடினார்.

பிப்ரவரி 28

தேசிய பாதுகாப்பு சூழல்:  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமைதியை விரும்பி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என அறிவித்தார்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்: டெல்லியில் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துக்கான சாந்தி ஸ்வரூப் பாத்நகர் விருதுகளை அளித்தார். அபிநந்தனை விடுவிப்பதாக இம்ரான்கான அறிவித்த பின்பு , பாகிஸ்தானுடனான தற்போதுள்ள சூழல் குறித்தும் அபிநந்தன் குறித்தும் விநோதமான கருத்தை கூறினார்.

நீங்கள் ஆய்வகங்களில் உங்களுடைய வாழ்க்கையை கழிக்கிறீர்கள். முதலில் பைலட் புராஜெட்டை உருவாக்குவது ஒரு சடங்கு. அதன் பிறகு நடைமுறைப்படுத்துதல் நடக்கும். இப்போதுதான் ஒரு பைலட் புராஜெக்ட் முடிந்திருக்கிறது. இனி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். முன்பு அதுவொரு பயிற்சியாக மட்டுமே இருந்தது”  என்றார் மோடி.

மார்ச் 1

தேசிய பாதுகாப்பு சூழல்: வெள்ளிக்கிழமை, பல மணி நேர தாமத்துக்குப் பின் பாகிஸ்தான் அபிநத்தனை விடுவித்தது.  பாகிஸ்தான் ராணுவம் பிரச்சார நோக்கத்துக்காக அபிநந்தனை வைத்து வீடியோ ஒன்றை எடுத்ததுதான் தாமதத்துக்கு காரணம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமரின் நிகழ்ச்சி நிரல்:  தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தேர்தல் பேரணி கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனின் தைரியத்தில் அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்வதாக மோடி பேசினார்.

அபிநந்தன் இந்தியா திரும்ப வாழ்த்தாத மோடி, அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து இப்படி டிவிட்டரில் பதிவிட்டார் .

தாயகம் திரும்பியிருக்கும் விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன் இந்த தேசம் உங்கள் முன்மாதிரியான தைரியத்தை எண்ணி பெருமை கொள்கிறது. நம்முடைய ஆயுதமேந்திய படைகள் 130 கோடி இந்தியர்களுக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. வந்தே மாதரம்.

Courtesy : TheWire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here