இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா தனது 2-வது டெஸ்ட் போட்டியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று விளையாடுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக இந்திய அணியில் அனுபவ பேட்ஸ்மேன் புஜாரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இன்றைய டெஸ்டில் சேர்க்கப்படலாம். புஜாரா அணியில் சேர்க்கப்பட்டால் லோகேஷ் ராகுல் அல்லது ஷிகர் தவான் அணியிலிருந்து நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

வானிலையை பொறுத்தவரை லண்டனில் தற்போது வெயில் அதிகம் என்பதால் ஆடுகளம் உலர்ந்து, ஆட்டத்தின் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும். இதனால் இந்திய அணி 2-வது சுழற்பந்து வீச்சாளர் தேர்வாக வாய்ப்பு உள்ளது என்பதை இந்திய கேப்டன் கோலி நேற்று உறுதிப்படுத்தினார்.

ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலான் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் அல்லது மொயீன் அலி ஆகியோரில் ஒருவரும் தேர்வாகலாம். மற்றும் புதுமுக பேட்ஸ்மேன் ஆலிவர் போப் இடம் பிடித்துள்ளார். 20 வயதான ஆலிவர் போப், கவுண்டி போட்டிகளில் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்த காரணத்தால் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலாவது டெஸ்டில் 20 வயதான ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் அரைசதத்துடன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

லார்ட்ஸ் ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 9 டெஸ்டில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. லார்ட்ஸ் மைதானம் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டுக்கும் சரிசமமான ஒத்துழைப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்யும் அணிக்கே அனுகூலம் அதிகமாகும். அதனால் ‘டாஸ்’ இந்தப் போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் விபரம் :

இங்கிலாந்து: அலஸ்டயர் குக், கீடான் ஜென்னிங்ஸ், ஆலிவர் போப், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் அல்லது மொயீன் அலி, அடில் ரஷித்.

இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா அல்லது குல்தீப் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

இன்றைய டெஸ்ட் போட்டியை இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்