இந்தியாவை மதம் சார்ந்த நாடாக மாற்ற முயற்சி ; குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு

0
323

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு முன்னர் சுமார் 60 மனுக்கள் சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தாலும், ஒரு மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது  இதுவே முதன்முறையாகும். 

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது மனுவில், கேரள அரசு, சிஏஏ இந்திய அரசியல் சட்ட சாசனத்தின் பல பிரிவுகளை மீறுவதாகவும், அனைவருக்கும் சம உரிமை என்பதை மறுப்பதாகவும், நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகள் மற்றும் மாண்புகளுக்கு முற்றிலும் முரணான இச்சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்படமாட்டாது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தியிருந்த நிலையில்,  குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன.14) வழக்கு தொடர்ந்துள்ளது. மனுவில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய அரசியலமைப்பின் 14, 21 மற்றும் 25 வது பிரிவுகளை மீறுவதாகவும், மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளது. 

சட்டப் பிரிவு 14, அனைவருக்கும் சம உரிமையை கொடுக்கிறது. சட்டப் பிரிவு 21, “சட்டப்படி அல்லாமல் எந்த ஒரு தனி நபரின் வாழும் உரிமையோ அல்லது தனிப்பட்ட சுதந்திரமோ பறிக்கப்படாது” என்கிறது. சட்டப் பிரிவு 25, “அனைத்து குடிமக்களும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை பின்பற்றலாம்” என்கிறது.

பல பாஜக ஆதரவுக் கூட்டணிக் கட்சிகளுமே, தாங்கள் ஆளும் மாநிலங்களில் என்ஆர்சி-ஐ அமல் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது 

அதேபோல, 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் (திருத்தம்) ஆணையை எதிர்த்து கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நாட்டில் வாழ அனுமதி கொடுக்கப்படும். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒன்றிணைந்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன.

மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாட்டிலேயே முதலாவதாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக, கேரள சட்டப் பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டமானது, இந்தியாவை மதம் சார்ந்த நாடாக மாற்றும் முயற்சியாகும். குடியுரிமை வழங்குவதில் மத அடிப்படையிலான பாரபட்சத்துக்கு வழிவகுக்கும் இச்சட்டம், அரசியல் சாசனத்தால் பேணப்படும் மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு எதிரானது என்றும் கேரள அரசு கூறுகிறது . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here