அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம், தாங்கள் புதிதாக வடிவமைத்துள்ள எஃப்-21 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டால், வேறு எந்த நாட்டுக்கும் அந்தப் போர் விமானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம், போர் விமானங்கள் தயாரிப்பில் தற்போது முன்னணியில் உள்ளது.

அந்த நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் விவேக் லல், பிடிஐ செய்தியாளருக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:
மேம்படுத்தப்பட்ட என்ஜின், மின்னணு போர்க் கருவிகள், அதிக ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் ஆகியவற்றுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எஃப்-21 போர் விமானம், இந்தியாவில் உள்ள 60-க்கும் மேற்பட்ட விமானப் படைத் தளங்களில் இருந்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை லாக்ஹீட் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்டால், அந்த விமானங்களை உலகின் வேறு எந்த நாடுகளுக்கும் விற்பனை செய்ய மாட்டோம். மேலும், இந்த ஒப்பந்தம் இறுதியானால், டாடா குழுமத்துடன் இணைந்து  இந்தியாவில் போர் விமானங்கள் தயாரிப்புக்கான வசதிகளை செய்து கொடுப்போம். இது, பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் இந்தியா ஒட்டுமொத்தமாக வளர்ச்சி அடைவதற்கான சூழலை உருவாக்கும் என்றார் அவர்.

சுமார் 1,800 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.26 லட்சம் கோடி)மதிப்பில் புதிதாக 114 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை இந்திய விமானப் படை கடந்த மாதம் வெளியிட்டது. இது உலகின் மிகப்பெரிய ராணுவத் தளவாட கொள்முதலில் ஒன்றாக இது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here