இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது. அதேபோன்று 20 லட்சம் செவிலியர்களை புதிதாக பணியமர்த்த வேண்டிய அவசியம் 

சுகாதாரத் துறைக்கு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நோய்கள் மற்றும் நிதிசார் நடவடிக்கைகளுக்கான தரவு மையம் ஆய்வு ஒன்றினை அண்மையில் மேற்கொண்டது. உலக நாடுகளின் சுகாதார வசதிகள், அவற்றின் கட்டமைப்பு, மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு உள்ள வசதிகள், மருத்துவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் விவரங்கள் திரட்டப்பட்டு அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவு அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவத் துறை இயங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ள விதி. அதேபோன்று, 483 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற விகிதமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் அத்தகைய நிலை இல்லை. 10,189 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற சூழலே நீடித்து வருகிறது. அதுபோலவே, செவிலியர்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை. இதனால் அனைவருக்கும் மருத்துவ வசதிகள் சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

அதுமட்டுமன்றி இந்தியாவில் 65 சதவீதம் பேர் மருத்துவத்துக்காக தங்களது சக்திக்கு மேல் பணத்தை செலவிட வேண்டியுள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டும்.

சர்வதேச அளவில் பல்வேறு முன்னேற்றங்களை எட்டி வரும் இந்தியா, சுகாதாரத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்க ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை முழுமையாக ஏற்க இயலாது என்று தமிழக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாநில வாரியாக அல்லாமல், பொதுவான ஓர் அறிக்கையை தயாரித்துவிட்டு, அதைக் கொண்டு நாட்டின் சுகாதாரத் துறையை எடை போட இயலாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக மருத்துவ கவுன்சிலைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:
ஒட்டு மொத்த இந்தியாவிலும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் கருத்து திணிப்பு. வட மாநிலங்களிலும், சில வடகிழக்கு மாநிலங்களிலும்தான் அத்தகைய நிலை உள்ளது. 

தென்னிந்தியாவைப் பொருத்தவரை அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் உள்ளனர்.
குறிப்பாக, தமிழகத்தை எடுத்துக் கொண்டால், 250 பேருக்கு ஒரு  மருத்துவர் என்ற நிலை உள்ளது. அதேபோன்று கேரளம், கர்நாடகத்திலும் அதிக அளவிலான மருத்துவர்கள் சேவையாற்றி வருகின்றனர்.

எனவே, அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களும், பரிந்துரைகளும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு பொருந்தாது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில்தான் வேறு எங்குமே இல்லாத வகையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும், 1,700-க்கும் அதிகமான மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. ஆண்டுதோறும் புதிய மருத்துவர்களை அதிக அளவில் உருவாக்குவது தமிழகம்தான் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Courtesy: DN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here