இந்தியாவில் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவுப் போக்கிலேயே உள்ளது. எதிர்வரும் பட்ஜெட்டில் வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை வாகன நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. வாகன விற்பனை வீழ்ச்சி குறித்தும் பார்க்கலாம்.

வாகன விற்பனை புள்ளிவிவரம் என்பது சாமானிய குடிமகனின் பொருளாதார நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடியாக திகழ்கிறது. மக்களின் பொருளாதாரம் நன்றாக இருந்தால் மட்டுமே வாகன விற்பனை உயரும். ஆனால் இந்தியாவில் கடந்த 10 மாதங்களாகவே வாகன விற்பனை சரிந்த வண்ணம் உள்ளது. 2018-2019ம் நிதியாண்டில் வாகன விற்பனை 8 சதவிகிதம் குறைந்துள்ளது. 2017-18ம் ஆண்டு 18 லட்சத்து 21 ஆயிரத்து 538 வாகனங்கள் விற்ற நிலையில் 2018-2019ம் ஆண்டில் அது 16 லட்சத்து 82 ஆயிரத்து 656 ஆக குறைந்தது. 

ஸ்கூட்டர், பைக் ஆகிய இரு சக்கர வாகனங்கள் விற்பனை 17% குறைந்துள்ளது. விற்பனை குறைவு காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 300 வாகன டீலர்கள் தங்கள் கடையை மூடியுள்ளனர். வாகன விற்பனை குறைந்ததால் ஷோரூம்களில் விற்காத கார்கள் ஏராளமாக தேக்கமடைந்துள்ளன. இதனால் மாருதி நிறுவனம் கடந்த மே 29ம் ஒரு நாள் தனது இரு உற்பத்தி ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தியது. மேலும் அந்நிறுவனம் இந்தாண்டில் 3 மாதங்களில் உற்பத்தியை 10% குறைத்துள்ளது. மகிந்திரா நிறுவனமும் நடப்பு காலாண்டில் 13 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. 

இது தவிர முன்னணி வாகன நிறுவனங்கள் அனைத்தும் இந்தாண்டுக்கான விற்பனை இலக்கை குறைத்துள்ளன. பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் இன்னமும் நீடிப்பது, பணப்புழக்கம் குறைவு உள்ளிட்டவையே வாகன விற்பனை குறைய காரணம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எல்லா வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக பட்ஜெட்டில் குறைக்க வேண்டும் என  அரசுக்கு வாகன உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை பெறும் திட்டத்திற்கு அரசு ஊக்கம் தர வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர். மந்த நிலையில் இருக்கும் வாகனத் துறையை முடுக்கிவிட அரசு எது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்பது ,வரும் ஜூலை 5ம் தேதி வெளியாகும் பட்ஜெட்டில் தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here