ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இஸ்லாமியா்கள் புனித பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு மானியம் அளித்து வந்தது. இந்த ஆண்டு 1.75 லட்சம் இஸ்லாமியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள பதிவு செய்திருந்தனா். இந்நிலையில், மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். ஹஜ் மானியத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, சிறுபான்மையின பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஹஜ் மானியத்தை வரும் 2022ஆம் ஆண்டிற்குள் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஹஜ் பயணம் தொடர்பாகப் புதிய கொள்கையை உருவாக்கக் குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஹஜ் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் முஸ்லிம் மதத்தினருக்கு மட்டும் மானியம் வழங்கப்படுவதில்லை. மற்ற மதத்தினருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கப்பட்டு வருகிறது. ஹரித்வார், அலகாபாத், நாசிக் மற்றும் உஜ்ஜையில் நடக்கும் கும்பமேளா நிகழ்ச்சிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இங்கு நடைபெறும் கும்பமேளாக்களில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு மூலம் மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த நிதியுதவியின் மூலம், கும்பமேளாவுக்கு வரும் யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதி மற்றும் அவர்களது பாதுகாப்பு, கட்டமைப்பு உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு மத்திய அரசு 1,150 கோடி ரூபாய் செலவழித்தது. மேலும் மாநில அரசு 11 கோடி ரூபாய் செலவிட்டது. இதில் 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் அப்போது குற்றம்சாட்டியிருந்தன.

கடந்த ஆண்டு உஜ்ஜைனில் நடைபெற்ற மகா கும்பமேளாவிற்கு மத்திய பிரதேச மாநில அரசுக்கு 100 கோடி ரூபாயை நிதியுதவியாக மத்திய அரசு கொடுத்துள்ளது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கும்பமேளாவிற்கு அம்மாநில அரசு ஏற்கனவே 3,400 கோடி ரூபாயை செலவிட்டிருந்தது.

இவை தவிர, பல மாநிலங்களில் பல்வேறு சமூகத்தினருக்கு அம்மாநில அரசுகள், புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு மானியங்கள் வழங்கி வருகின்றன. சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களிலிருந்து மானசரோவர் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களுக்கு தலா 1.5 லட்சம் ரூபாய் வழங்குகின்றன. மேலும், மத்தியப் பிரதேச மாநில அரசு அயோத்யா, மதுரா, புனிதர் கபீர் பிறந்த இடம் மற்றும் கேரளாவில் உள்ள செயிண்ட் தாமஸ் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்லவும் மானியம் வழங்கி வருகிறது.

நன்றி: scroll.in

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்