அமெரிக்காவின் உதவியுடன் 6 புதிய அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது.
வாஷிங்டனில் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை அமைச்சர் ஆண்ட்ரியா தாம்ஸனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நேற்று முன்தினம் சந்தித்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டம் தொடர்பாக, இருதரப்பு சார்பிலும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் 6 அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா இணைவதற்கு ஆதரவு அளிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும், “இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பை பலப்படுத்தவும் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதி தெரிவித்துள்ளன” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 புதிய அணுமின் நிலையங்கள் அமையவுள்ள இடங்கள் குறித்தும், இத்திட்டம் நிறைவேற உள்ள கால வரையறை குறித்தும் அறிக்கையில் இடம் பெறவில்லை. அமெரிக்காவின் அணு உலையை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது சென்னை கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட 7 இடங்களில் அணு மின்நிலையங்கள் உள்ளன. இவற்றுடன் அமெரிக்காவின் 6 புதிய அணுமின்நிலையங்களும் சேரும்.

இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த 2008ஆம் ஆண்டு, சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா 12 நாடுகளுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை அடுத்துத்தான் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷியா, கனடா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, ஜப்பான், வியட்நாம், வங்காளதேசம், கஜகஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டது.

அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை அமைச்சர் ஆண்ட்ரியா தாம்ஸன், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே சந்திப்பின்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெறுவதற்கு தனது ஆதரவை அமெரிக்கா மறு உறுதி செய்துள்ளது.

48 நாடுகளைக் கொண்ட அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக அந்தக் கூட்டமைப்பில் இந்தியா இணைவதில் பெரும் தடை நிலவி வருகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here