பழங்குடியினர்களில் 45.9 சதவிகிதம் பேர், குறைந்த வருமானத்தின் காரணமாக மிகவும் ஏழ்மைநிலையில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மது (27), என்பவர், அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களைத் திருடியதாகக் கூறி, அப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்களுடன் சேர்ந்து சிலர், மதுவைக் கடுமையாகத் தாக்கினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரை அடித்துக் கொன்றவர்கள், அதனை செல்ஃபி மற்றும் வீடியோவும் எடுத்துக் கொண்டனர். இந்த ஈவிரக்கமில்லாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொலை செய்யப்பட்ட மதுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பல நாட்களாக சாப்பிடவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. பசி மற்றும் பட்டினியால் வாடிய உடலுடன், இரண்டு கைகள் கட்டப்பட்டநிலையில் காணப்படும் மதுவின் படம் அனைவரையும் உலுக்கியிருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் மற்ற சமூகத்தினரைவிட பழங்குடியினர்களில் 45.9 சதவிகிதம் பேர், குறைந்த வருமானத்தின் காரணமாக மிகவும் ஏழ்மைநிலையில் இருப்பதாக தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு (2006-2016) ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் பழங்குடியினர்களில் 49.9 சதவிகிதம் பேர் வறுமையில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கையில் குறைந்து 45.9 சதவிகிதமாகவுள்ளது.

அதேபோன்று, 2006ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர்களில் 27.9% பேர் வறுமையில் இருந்துள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கையில் ஒரு சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது. பிற பிற்படுத்தப்பட்டோர்களில் 2006ஆம் ஆண்டில் 18.1 சதவிகிதமாகவும், 2016ஆம் ஆண்டில் 18.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

Source : IndiaSpend.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here