சென்னையில் ஸ்குவாஷ் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் போட்டியில் பங்கேற்க ஸ்விட்சர்லாந்தின் நெ.1 ஜூனியர் வீராங்கனை மறுத்துள்ளார்.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் தொடரில் இந்தியா உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

ஆம்ப்ரே அல்லின்க்ஸ், ஸ்விட்சர்லாந்தின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை. இவர், சென்னை ஜூனியர் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதலில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த எதிர்மறையான செய்திகளைப் படித்த ஆம்ப்ரேவின் பெற்றோர், தங்கள் மகள் சென்னைப் போட்டியில் கலந்துகொள்ளமாட்டார் என்று ஸ்விட்சர்லாந்து அணி நிர்வாகத்திடம் அறிவித்துள்ளார்கள்.

9

பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளால் தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் தங்கள் மகளை அங்கு அனுப்ப விருப்பம் இல்லை என்றும் தங்கள் முடிவுக்கு விளக்கம் அளித்துள்ளார்கள். இத்தகவலை ஸ்விட்சர்லாந்து அணியின் பயிற்சியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, ஈரான், ஆஸ்திரேலிய விளையாட்டு நிர்வாகங்களும் கவலைப்பட்டுள்ளன. இதனால் சென்னைப் போட்டியில் விளையாடும்போதும் வெளியே செல்லும்போதும் கவர்ச்சியான உடைகளை அணியவேண்டாம் என்று தங்களுடைய வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். ஆஸ்திரேலிய வீராங்கனை அலெக்ஸ் ஹேடன் ஒரு பேட்டியில் கூறியதாவது: சென்னையில் தனியாக வெளியே செல்ல தயக்கமாக உள்ளது. அணியினருடன் மட்டுமே வெளியே செல்கிறோம், அதிலும் பாதுகாப்புக்கு ஆண்களில் ஒருவரையாவது துணைக்கு அழைத்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச ஸ்குவாஷ் சங்கம், பெற்றோர்களின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைவரும் திருப்தியடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ளது.

இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில்,”இது முரணாக உள்ளது. உலகில் பெண்களுக்கான பாதுகாப்பான இடங்களில் சென்னையும் ஒன்று. சொல்லப்போனால் சுவிட்சர்லாந்தைவிட சென்னை பாதுகாப்பானது.

ஆனால், உண்மையை விட பொய் வேகமாகப் பரவியுள்ளது. பெண்கள் மீதான இந்தியாவின் மதிப்பு குறித்த நம்பிக்கையை நாம் இந்த உலகில் மீட்டெடுக்க வேண்டும். இந்தப் பொறுப்பு அரசிடமிருந்து தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்