இந்தியாவில் கொரோனா 2வது அலையில் இளைஞர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று குறைந்து இருந்தாலும் 955 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்து வரும் 3வது அலையை எதிர்கொள்ள வசதியாக தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 35 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.இந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு தாக்கிய கொரோனா முதல் அலை மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பமான கொரோனா 2வது அலை ஆகியவற்றின் தன்மைகள் குறித்து ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டன. முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 18,961 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் முதலாவது அலையை விட 2வது அலையில் 20 முதல் 39 வயதுக்கு உள்ளான இளைஞர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்படாதவர்கள் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவலும் வெளியாகி உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மூச்சு திணறல், வெண்டிலேட்டர் தட்டுப்பாடு ஆகியவற்றால் ஏற்பட்ட உயரிழப்புகளும் 2வது அலையில் 3% அதிகரித்துள்ளது.2 அலைகளிலுமே காய்ச்சல் பொதுவான அறிகுறியாக இருந்தாலும் 2வது அலையில் மூச்சுத் திணறல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களும் நடுத்தர வயதினரும் மூச்சுத் திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு 3வது அலையை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என்று பாராட்டியுள்ள மருத்துவர்கள், மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்றவர்கள், அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களிடமும் ஆய்வை நடத்துவது மேலும் பல தகவல்களை அரிய உதவும் என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here