கொரோனா பாதிப்பு நான்காம் அலை ஒரு வேளை ஏற்பட்டாலும் அது குறித்து மிகவும் அச்சம் கொள்ள தேவையில்லை என மருத்துவர் ககன்தீப் கங்க் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சில நகரங்களில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஜூன் மாத காலத்தில் நான்காம் அலை பாதிப்பு ஏற்படும் என ஐஐடி ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. நான்காம் அலை குறித்த பேச்சு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக வேலூர் சிஎம்சி கல்லூரி பேராசிரியரும் நாட்டின் முன்னணி மைக்ரோ பயாலஜிஸ்டுமான டாக்டர் ககன்தீப் கங்க் நான்காம் அலை குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது “இந்தியாவில் நான்காம் அலை ஏற்படும் என்ற கூற்று தற்போதைய சூழலில் மிகையான ஒன்று. அதேவேளை, ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

உருமாறிய வைரஸ் பரவல் என்பது இயல்பான ஒன்று தான். வெளிநாடுகளுக்கு மக்கள் சென்று வரும் சூழலில் இதை தவிர்க்க முடியாது. அதேவேளை, XE வகை கொரோனாவைக் கண்டு அச்சப்பட வேண்டியது இல்லை. BA.1, BA.2 போன்ற ரகங்களைப் போல XE தொற்று அதிக தீவரத்தன்மை கொண்ட தொற்று அல்ல. அனைத்து பாதிப்புக்களும் XE வகை எனவும் அச்சம் கொள்ள தேவையில்லை” என்றார்.

டெல்லியில் தொற்று பரவல் விகிதம் ஒரே வாரத்தில் 0.5 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஹரியானாவில் தினசரி பாதிப்பு 1,200க்கும் மேல் உள்ள நிலையில் அதில் 1,000 குருகிராம் மாவட்டத்தில் உள்ளது.

டெல்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 20ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த முறை தொற்று பாதிப்பு குழந்தைகளிடம் காணப்படுவது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டாக்டர் ககன்தீப் கங்க் கூறுகையில், ஒரு நபருக்கு கோவிட் பாதிப்பு ஏற்படுகிறது என்றால், அவருக்கு குழந்தை பருவத்தில் ஏற்படுவதே சரியான நேரமாகும். அவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்து நோய் எதிர்ப்பு தன்மை விரைவில் உருவாகும். சீரோ சர்வேயின் அடிப்படையில் ஏற்கனவே 80 சதவீத குழந்தைகளுக்கு தொற்று பரவல் தென்பட்டுள்ளது.

எனவே, பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கவலைப்படாமல், தீவிர பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளை நாம் கண்டறிந்து அவர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்தியாவில், ஜனவரி மாதம் 15-18 வயதினருக்கான தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. 12-14 வயதினருக்கான திட்டமும் அன்மையில் தொடங்கப்பட்ட நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் அமலில் உள்ளது.

இதுவரை மொத்தம் 186.28 கோடி தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளது. 99 கோடியே 74 லட்சம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 84 லட்சத்து 18 ஆயிரம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here