இந்தியாவில் ஒவ்வொரு பத்து நிமிடங்களிலும் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது என அதிர்ச்சி தகவல்

0
384

இந்தியாவில் ஒவ்வொரு பத்து நிமிடங்களிலும் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது என்று அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.  சர்வதேச காணாமல் போனோர் நேற்று அனுசரிக்கப்பட்ட சூழலில் இந்த செய்தித் தொகுப்பு அதன் பின்னணியை ஆராய்கிறது…

கள்ளம் கபடமற்றது குழந்தைகளின் அன்பு.அந்த அன்புக்கு பிரதிபலனாக மிகுந்த அன்போடு குழந்தைகளிடம் கொஞ்சிப் பேசும் மனிதர்களைக் கூட குழந்தையைக் கடத்த வந்தவர் என்று சந்தேகத்துடன் காணும் பெற்றோர் பொது இடத்தில் வைத்து தர்ம அடி கொடுக்கும் சம்பங்கள் அதிகரித்துள்ளன.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான் , மகாராஷ்ட்ரா, பீகார் ஆகிய மாநிலங்களில் சுமார் 100 பேர் குழந்தையை கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தீர விசாரிக்காமலும் சட்டத்தைத் தன் கையில் எடுத்து வன்முறையைத் தூண்டுவதும் குற்றமாகும்.

ஆனால் குழந்தைகள் கடத்தப்படுவது கொடூரமான உண்மைதான். இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு குழந்தை வீதம் கடத்தப்படுவதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு தெரிவித்துள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி.

நடப்பாண்டில் இதுவரை மட்டும் 54 ஆயிரத்து 750 குழந்தைகள் காணாமல் போய் விட்டனர். இதில் பாதிப்பேரை மட்டும் தான் கண்டுபிடித்து மீட்க முடிந்துள்ளது. மற்ற குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது போலீசாருக்கே தெரியவில்லை. இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 கோடியாகும்.

இதில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போவது வழக்கமாக உள்ளது. அரசு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்த போதும் காணாமல் போன குழந்தைகளின் ஒரு தடயமும் கிடைப்பதில்லை. இதில் குடும்ப உறவினர்களால் கடத்தப்படும் குழந்தைகள், அந்நியர்களால் கடத்தப்படும் குழந்தைகள், தாமாகவே வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகள் என வகைமைகள் உண்டு. குழந்தைத் தொழிலாளர்களாகவும் ஊனமாக்கப்பட்டு பிச்சைக்காரர்களாகவும் பல குழந்தைகள், யாருடைய பேரைசைக்காகவோ கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் காணாமல் போன இடம் முக்கியமானது.

போலீசார் தகவல் கிடைத்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்தால் குழந்தையை கடத்தப்படுவதில் இருந்து மீட்க முடியும். ஆனால் பல நேரங்களில் போலீசாரின் மெத்தனமும் அலட்சியமும்தான் குழந்தைகள் நிரந்தரமாக காணாமல் போய்விடுவதற்கான சூழலை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பலர் போலீசாரை நம்பாமல் சமூக ஊடகங்களில் காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய பதிவுகளை போடுகின்றனர். கூட்டமான இடங்களில் குழந்தைகளை பெற்றோர் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தனியாக குழந்தைகளை கடைக்கு அனுப்பக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்த நமக்கு ஈடு இணையில்லாத நமது செல்வங்களை பாதுகாப்பதில் முழுமையான விழிப்புணர்வு தேவை. ஏனென்றால் ஒரு முறை காணாமல் போய்விட்டால் அந்தக் குழந்தை திரும்பக் கிடைக்குமா என்ற கேள்வியுடன் கிடைக்காவிட்டால் அதன் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சமும் பின்னிப் பிணைந்துள்ளது.

Courtesy: polimernews