இந்தியாவில் ஒரு மரபணு மட்டுமதான், அது இந்து மட்டும்தான் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபலே தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் லக்னோவில், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபலே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசபலே பேசியதாவது:
”இந்து என்றால் தேசியவாதி என்று அர்த்தம். இந்தியாவில் ஒரு மரபணு மட்டும்தான் இருக்கிறது, அந்த மரபணு பெயர் இந்து. இந்துத்துவாவுக்கு ஓர் அடையாளம் இருக்கிறது, வேறுபட்ட சிந்தனையுடன் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வகுப்புவாதத்தைப் பரப்புகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பு என்ன சொன்னாலும் இந்துத்துவா புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
100 ஆண்டுகளுக்கு முன், இந்து எனும் வார்த்தை பரந்த அளவில் திரித்துக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் நீண்டகால பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள், இதை வகுப்புவாதமாக்குகிறார்கள். சிலர் நாங்கள் இந்துக்கள் அல்ல, இந்தியர்கள் என்கிறார்கள். சிலர், அரசியல் காரணங்களுக்காக அந்த வார்த்தையைக் கூறவே புறக்கணிக்கிறார்கள். அது அவர்களின் கண்ணோட்டம், ஆனால், பெயர் மிகவும் முக்கியமானது. நீங்கள் மடோனாவின் புகைப்படத்துக்கு எந்தப் பெயரையும் வைத்துவிட முடியாது.
அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று முதல்வர் ஆதித்யநாத் மாற்றியுள்ளது என்பது வரலாற்றைத்தான் பிரதிபலிக்கிறது. இந்தியா இந்துராஷ்டிராவாக இருந்தால் என்ன நடக்கும் எனச் சிலர் கேட்கிறார்கள். அவர்கள் இந்து எனும் வார்த்தையையும், ராஷ்டிரா எனும் வார்த்தையையும் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் அயோத்தியை அயோத்தி ஹோனுலுலு என்றால் அது சரியானதாக இருக்காது”.
இவ்வாறு தத்தாத்ரேயா தெரிவித்தார்.