குடிநீர்த் தட்டுப்பாடு, சுகாதாரக் குறைபாடு, ஊட்டச்சத்துக் குறைபாடு, அடிப்படை மருத்துவ வசதிகள் குறைபாடு போன்ற காரணங்களால், இந்தியாவில் இரண்டு நிமிடங்களுக்கு மூன்று குழந்தைகள் இறந்து வருவதாக ஐக்கிய நாடுகள்(ஐ.நா.) அவையின் குழந்தை இறப்பு மதிப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் –

இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு மட்டும் 8.02 லட்சம் (802000) குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் பிறந்தவுடன் இறந்த குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6.05 லட்சம் (605000) பேர். 5 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 1.52 (152000) லட்சம் பேர் இறந்துள்ளனர்.

இது உலக நாடுகள் அனைத்திலும் காணப்படும் எண்ணிக்கையை விட அதிகமாகும். இருந்தபோதிலும், கடந்த 5 ஆண்டு அறிக்கைகளை ஒப்பிடும்போது, இது இந்தியாவின் குறைந்தபட்ச எண்ணிக்கையாகும். 2017-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 8.67 லட்சமாக இருந்தது.

2016-ஆம் ஆண்டு, இந்தியாவின் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 44 (1,000 குழந்தைகளுக்கு) ஆக இருந்தது. 2017-ஆம் ஆண்டு, ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதம் 39 ஆகவும், பெண் குழந்தைகளின் இறப்பு விகிதம் 40 ஆகவும் உள்ளது.

தடுக்கப்படக்கூடிய இறப்புகளின் மீது கவனம் செலுத்துவது, வருங்கால இளைஞர்களின் உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பது ஆகியவற்றை அனைத்து நாடுகளும் அடிப்படைக் கொள்கையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அந்த நாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2.5 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. உலக அளவில் 18 சதவீத குழந்தைகள் இந்தியாவில் பிறக்கின்றன. இந்த நிலையில், குழந்தைகள் இறப்பு விகிதம் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது)