சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சார ஆற்றலில் இயங்கும் 100 எலெக்ட்ரிக் ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

இந்தியாவிலேயே முதன் முறையாக 100 மின்சார ஆட்டோக்களின் சேவையை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று எலெக்ட்ரிக் ஆட்டோ பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் மின்சார ஆற்றலுக்கான வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றுக்கு பல மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

தமிழகத்திலும் மின்சார வாகன பயன்பாட்டை கட்டமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, கடந்த ஆகஸ்டு 26ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் 2 மின்சார பேருந்துகள் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பரிசோதனை முயற்சியாக இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்ட நிலையில், சென்னை சென்ட்ரல் முதல் திருவான்மியூர் வரை தினமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்தில் 32 பேர் உட்கார்ந்து கொண்டும், 25 பேர் வரை நின்று கொண்டு செல்ல முடியும். பேட்டரி ஸ்வேப்பிங் தொழில்நுட்பம் கொண்ட இந்த பேருந்தில் இரு பேட்டரிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பேட்டரியை ஒரு மணிநேரம் சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 50 கி.மீ வரை இயக்க முடியும்.

4 கி.மீ-க்கு ஒருமுறை பேட்டரி ஸ்வேப்பிங் செய்வதன் மூலம், இந்த பேருந்தை ஒரே இயக்கத்தில் அதிகப்பட்சமாக 20 கி.மீ வரை இயக்கலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்தது.

தமிழக அரசின் மின்சார பேருந்தில் குளிர்சாதன வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பேருந்து நிறுத்தத்தை ஒலி பெருக்கி மூலம் சொல்லும் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எரிபொருள் பேருந்துகளை இயக்க ஆகும் செலவு, சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருதியும் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு.

முன்னதாக, கடந்தாண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழக அரசு-ஹூண்டாய் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ. 2 ஆயிரம் கோடி முதலீட்டில் சென்னையில் மின்சார கார் தயாரிப்பை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.

அதனடிப்படையில், கடந்த ஜூலை 24ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் முதன்முறையாக ஹூண்டாய் கோனா எஸ்யூவி எலெக்ட்ரிக் கார் சேவையை துவங்கி வைத்தார் முதல்வர்பழனிசாமி.

இந்தியாவின் எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 30 லட்சம் வரை விலைபெறும் இந்த எஸ்யூவி கார், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கி.மீ வரை செல்லும். தற்போது இந்த காருக்கான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

அண்மையில், அமெரிக்க சென்ற முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் மின்சார கார் உற்பத்தி ஆலையை அமைத்திட டெஸ்லா நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து அமெரிக்காவின் புதிய தொழில்முனைவோருக்கான முதலீட்டில் 10 சதவீதத்தை தமிழக அரசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின் அமெரிக்க பயணத்தின் போது சென்னையில் கார் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், சிறப்பு சலுகைகள், விரைவாக அனுமதி, ஆலைக்கு தேவையான பணியாளர்கள், ஏற்றுமதிக்கு உகந்த சூழல்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு அதிகாரிகள் டெஸ்லா நிறுவனத்திற்கு எடுத்துரைத்துள்ளனர். இதனால் விரைவிலேயே டெஸ்லா கார் உற்பத்தி ஆலை சென்னையில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி எலெக்ட்ரிக் ஆட்டோ சேவையை தொடங்கி வைத்துள்லார். எம் ஆட்டோ பிரைடு என்கிற தனியார் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்களை தயாரித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக எலெக்ட்ரிக் ஆட்டோ சேவை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

முதற்கட்டமாக 100 எலெக்ட்ரிக் ஆட்டோ சேவைகள் நகரம் முழுவதும் தொடங்கப்படுகிறது. பெட்ரோல், டீசலில் ஓடக்கூடிய ஆட்டோவை மின்சார ஆட்டோவாக மாற்றி நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதனால் இ-ஆட்டோ சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இ-ஆட்டோக்களில் சிசிடிவி, ஜிபிஎஸ் கருவிகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆட்டோவில் இருக்கும் பேட்டரியை மூன்று மணிநேரம் சார்ஜ் செய்தால்100 கி.மீ வரை ஓடும். பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை இயக்குவதற்கு, ஒரு திருநங்கை உட்பட 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வருங்காலத்தில் ஆட்டோ ஓட்டுநரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு வழி வகுத்து வருகிறது.

மேலும் படிக்க : 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here