இந்தியாவிலேயே ஏற்றுமதியில் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அச்சுத்தொழில் என்பது மற்ற தொழில்களைப் போல கிடையாது. அச்சுத்தொழில் என்ற சொன்னாலே அது நச்சுத் தொழில் என்று அந்தக் காலத்திலே சொல்வார்கள். ஆனாலும் அச்சுத்தொழிலில் ஆர்வமாக இருப்பவராக இருந்தால், எவ்வளவுதான் சிரமம் இருந்தாலும் அந்தத் தொழிலை அவர்கள் விட்டு விட்டு சென்றுவிட மாட்டார்கள்.  வைராக்கியமாக நடத்துவார்கள். லாப-நஷ்டம் பார்க்காமல் அச்சுத் தொழிலை நடத்துவார்கள். என்னுடைய பள்ளிக் காலமாக இருந்தாலும் சரி கல்லூரி காலமாக இருந்தாலும் முரசொலி நாளிதழில் வேலை பார்ப்பதை நான் வழக்கமாக தான் வைத்துக்கொண்டிருந்தேன்.

முதலமைச்சராக ஆனபிறகு முரசொலிக்கு நான் அடிக்கடி செல்லக்கூடிய வாய்ப்பு பெறாவிட்டாலும் வாய்ப்பு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்போதும் நான் சென்று கொண்டிருக்கிறேன். புதிய அரசு அமைந்த பிறகு எத்தனையோ முன்னெடுப்புகளை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.  திமுக அரசு அமைந்த இந்த நான்கு மாத காலத்தில் தொழில்துறை  புத்துணர்வு அடைந்துள்ளது. இரண்டு முக்கியமான மாநாடுகளை அரசு நடத்தியிருக்கிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற மாநாட்டை சென்னையில் நடத்தினோம். மிக முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற மாநாடு அது. தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவதே எனது லட்சியம் என்று அந்த மாநாட்டில் நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அதற்காக தொழில்புரிவதை எளிமை ஆக்க ஒற்றைச் சாளர முறை இணையதளம் 2.0வை நான் தொடங்கி வைத்தேன்.

புதிய தொழில்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்க வேண்டுமானால் உள்கட்டமைப்பை உலகத் தரம் வாய்ந்ததாக அமைக்க வேண்டும். அதற்கான பணிகளையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். அந்த மாநாட்டில்தான் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு 35 நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. முதன் முதலாக 17,141 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன்மூலமாக 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. அடுத்ததாக சில வாரங்களுக்கு முன்னால் ஏற்றுமதி தொடர்பான ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தினோம். ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு என்று அந்த மாநாட்டுக்குத் தலைப்பு கொடுத்து இருந்தோம். அன்றைய  தினம் 2,180 கோடி ரூபாய் மதிப்பிலான 25 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 42 ஆயிரத்து 145 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இப்படி பல்வேறு நிறுவனங்கள் தொடங்க இருக்கின்றன. 1.93 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், இந்தியாவிலேயே, தமிழ்நாடு மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கி வருகிறது. இதனை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கு அதற்கான முழுமூச்சில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதற்காக தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை வெளியிட்டு இருக்கிறோம். மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுகுறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனக் கையேட்டையும் வெளியிட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். ஏற்றுமதி ஆகும் பொருள்களும் அதிகமாக வேண்டும். அதற்கான அனைத்து திட்டமிடுதல்களையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் தொடங்கி – தமிழக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது வரை இந்தியாவின் கவனத்தை இன்றைய தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. என்னுடைய வருத்தமெல்லாம் சிறு தவறு நடக்கும்போது அதனை பெரிதாக விமர்சிக்கும் சில பத்திரிகைகள் – பெரிய நன்மைகளைச் செய்யும்போது சிறு அளவில் கூட பாராட்டுவது இல்லையே என்பதுதான். பாராட்ட வேண்டியதற்கு பாராட்டுபவருக்குதான் திட்டுவதற்கான உரிமையும் இருக்கிறது என்பதை அனைத்து ஊடகங்களும் மறந்துவிட வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களுக்கும் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.  இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here