கடந்த திங்கட்கிழமை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் அரசு பிரித்தது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை முறித்துக் கொள்வதென்றும், தூதர்களை திரும்ப அழைத்துக் கொள்வதென்றும் புதன்கிழமை முடிவெடுத்தது. மேலும், இந்த பிரச்சினை குறித்து ஐ.நா. உள்பட உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெக்மூத் குரேஷி(Shah Mehmood Qureshi)  நிருபர்களிடம் பேசியபோது : காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்சினையில் பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக உறவை துண்டித்தது பற்றி சீன அரசிடம் எடுத்துக் கூறுவதற்காக விரைவில் சீனா செல்ல இருக்கிறேன் எனக் கூறினார். 

முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இது உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தியா கூறி வருகிறது. இதில் இந்தியா தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி காஷ்மீர் பிரச்சினைக்குரிய பகுதி என்று சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்திய அரசு இதனை மாற்றாமல் காஷ்மீர் மக்களோ, பாகிஸ்தானோ ஒருபோதும் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாகிஸ்தான் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி தீர்வு காண எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால் இந்தியாதான் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்துவதில் இருந்து நழுவிச் செல்கிறது” என்று கூறினார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)