மும்பையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் சினிமா மியூசியத்தை பிரதமர் மோடி நாளை(சனிக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மும்பை பெடரர் சாலையில் உள்ள 19ம் நூற்றாண்டு விக்டோரியா பங்களாவான குல்சன் மஹால் வளாகத்திலும் அதன் அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்துமாடி கட்டிடத்திலும் இந்த அருங்காட்சியகம், ரூ.140 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் வளர்ச்சியையும் வரலாற்றையும் சித்தரிக்கும் வகையில் இங்கு பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மவுன பட காலம், பேசும் படம் உருவானது, உலகப் போர் தாக்கம், பிராந்திய மொழி படங்களில் இருந்து புதிய சினிமா வரை பல்வேறு வரலாறுகள் தொகுப்புகள் ஒன்பது பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், காந்தியும் சினிமாவும், குழந்தைகள் திரைப்பட அரங்கம், இந்திய சினிமாவில் படைப்பாற்றலும் டெக்னாலஜியும், பிராந்தியமொழி சினிமா ஆகிய நான்கு கருப்பொருள்களில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 1896ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி என்ற நிறுவனம் மும்பையில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here