இந்தியப் பொருளாதாரம் எங்கே போகிறது?: பகுதி 1

பொருளாதாரம் நலிவடைந்ததற்கான காரணங்கள் எவை?

0
382
சூரத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நடத்திய ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணி

[மிகப்பெரிய அளவில் பொருளாதாரப் பின்னடைவுகளையும் வேலை இழப்புகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. மோடி அரசின் அடுத்தடுத்த தாக்குதல்கள் எதுவும் எப்போதும் நேரலாம் என்கிற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. இந்தியா ஒரு மிகப் பெரியப் பொருளாதார நிலைகுலைவைச் சந்திக்கப் போகிறது என துறை சார்ந்த வல்லுனர்கள் மட்டுமல்ல, பா.ஜ.கவினரே குற்றம் சாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.]

நவராத்திரி என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தமது நோக்கங்கள், செயல்பாடுகள், பணிகள் எல்லாம் குறித்தும் கணக்கெடுக்கும் காலமும் கூட. இந்த ஆண்டு அந்தக் கணக்கெடுப்பின் ஊடாகப் பெரிய அளவில் அவர்கள் மோடி – அமித்ஷா தலைமையில் அமைந்துள்ள பா.ஜ.க ஆட்சியின் எதிர்காலம் குறித்த கவலையை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தக் கவலையைச் சென்ற செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மதுராவில் நடந்த சங்கப் பரிவாரங்களின் கூட்டுக் கூட்டம் ஒன்றில்தான் முதலில் வெளிப்படுத்தினார். சுமார் நாற்பது சங்கப் பரிவார அமைப்புகள் நிறைந்திருந்த கூட்டம் இது. அதன் பின் அவரது விஜயதசமி உரையிலும் (செப் 30) அது வெளிப்பட்டது. இதற்கு மூன்று நாட்கள் முன்னர்தான் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயீ தலைமையில் அமைந்த அவர்களின் முதல் கூட்டணி ஆட்சியில் (1999 -2004) நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் இன்று எவ்வாறு மிகப் பெரிய தோல்விகளைச் சந்தித்துக் கொண்டுள்ளது என்பது குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை (செப் 27) இந்திய அளவில் பெரிய அளவில் கவனத்திற்குள்ளானது.

அதன்பின் தமது ‘சர்சங் சலக்கின்’ (தலைவர்) இந்த எச்சரிக்கை உரையை ஆங்காங்கு சங்கப்பரிவார அமைப்புகள் விவாதத்திற்கு உட்படுத்தின. வார ணாசியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ‘அகில பாரதீய ராஷ்ட்ரீய சைஷிக் மஹாசங்’ எனும் அதன் பரிவாரங்களில் ஒன்றும் நடத்திய அப்படியான ஒரு விவாதக் கூட்டம் பற்றி வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார் (Frontline, Oct 27, 2017).
2014 தேர்தலில் பெற்ற அமோக வெற்றியின் பின்னணியில் தாங்கள் இனி “வெல்லமுடியாதவர்கள்” எனக் கொண்டிருந்த அதீத நம்பிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதையே இந்த உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன எனவும் ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

மோடி – அமித்ஷா அணியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்குச் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இது தொடர்பாக அவர்கள் அளந்த கதைகள் எல்லாம் பொய்யாகவும் ஆயின. கள்ள நோட்டுப் புழக்கமும் கருப்புப் பணமும் இத்தோடு ஒழியும் எனச் சொன்னதெல்லாம் அபத்தம் என்பது இன்று பள்ளி மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அம்பலமாகியுள்ளது. ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜனின் வெளியேற்றமும் இவர்களின் மூட முரட்டுத்தனத்தின் அடையாளமாகவே இன்று உலகளவில் கேலி செய்யப்படுகின்றது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு முன், “கிட்டத்தட்ட எல்லாப் பழைய நோட்டுகளும் வங்கிகளில் வந்து குவிந்துவிட்டன” என வெளியிட்ட அறிக்கை மறுபடி இவர்களை வாய் திறந்து பெருமை அடிக்க இயலாதவர்களாக்கி விட்டது.

இந்தியா முழுவதும் உள்ள சகல தரப்பினரும் இப்போது அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் மட்டுமல்ல ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா முதலான மாநிலங்களிலும் விவசாயிகள் போராடிக் கொண்டுள்ளனர். வணிகர்கள் புதிய வரி விதிப்பு முறைக்கு எதிராக அதிருப்தி கொண்டுள்ளனர்.

GST என்பது ஒரு வரிவிதிப்பு அமைப்பிலிருந்து இன்னொரு முறைக்கு மாறுவது என எளிதில் சொல்லி அகன்று விடும் பிரச்சினை அல்ல. ஒரு மகா புரட்சிகரமான வரி விதிப்பு முறையின் தொடக்கம் என மோடி –அமித்ஷா – அருண்ஜேட்லி ஆகியோர் விரித்த கதையும் இன்று பெரியளவில் அம்பலமாகியுள்ளது. சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு முதலாளிகளை ஒழித்துக் கட்டும் ஒரு செயலாக இன்று அது வெளிப்பட்டுள்ளது. “அமைப்பு சாராத”, ‘informal’ என்றெல்லாம் அழைக்கப்படும் சிறு தொழில் துறையை ஒழித்துக் கட்டி, தொடக்க கால மூலதனக் குவிப்பு (primitive accumulation) என்கிற நிலைக்கு இது இட்டுச் செல்கிறது என்கிற விமர்சனங்களை பிரபாத் பட்நாயக் போன்ற பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கின்றனர். மூலதனைத்தைப் பரவலாக்காமல் மையத்தில் குவியும் நிலையை இது ஏற்படுத்தும் என்கிறார் அவர். சிறு வணிகர்கள் மத்தியில் இன்று உருவாகியுள்ள இந்த அதிருப்தியைத் தணிக்கும் முகமாக சமீபத்தில் பெரிய விளம்பரங்களுடன் நடத்தப்பட்ட GST கவுன்சில் கூட்டம் (அக் 6, 2017) எந்தப் பெரிய சலுகைகளையும் அறிவிக்கவில்லை. நகைகள் வாங்க எல்லோரும் தங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும் என்கிற நிபந்தனை இப்போது 50,000 ரூ வரை வாங்கும்போது தேவையில்லை எனச் செய்யப்பட்ட்ட திருத்தம் பெரிய பயனை அளித்துவிடப் போவதில்லை என்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் தங்க வணிகர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Scroll.in இணைய தளம் வாரணாசி கைத்தறி நெசவாளிகள், ஹோசூர் சிறு தொழில் உற்பத்தியாளர்கள் எனப் பல தரப்பினரையும் நேர்கண்டு எப்படி அவர்கள் GSTயால் பாதிக்கப்பட்டுத் தம் தொழில்களையே கைவிடலாமா என எண்ணும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்பதை வெளிக்கொணர்ந்தது. சிறிய லாபங்களுடன் கூடிய ஏற்றுமதி வணிகம் இன்று முற்றாகச் சீரழிந்துள்ளது. முன்னதாகக் கட்டும் வரியைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் கால தாமதம் அவர்களின் தொழிலைப் பாதிக்கிறது. வழக்கமாக பா.ஜ.கவை ஆதரிக்கும் குஜராத், சூரத் முதலான பகுதிகளில் உள்ள பனியா முதலான வணிகச் சமூகங்களும்கூட இன்று தமது ஆதரவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன. சிறிய அளவிலான மருந்து உற்பத்தித் தொழிலகங்கள், திருப்பூர் முதலான பகுதிகளில் உள்ள ஜவுளித் தொழில்கள், பட்டு முதலான நெசவுகள் எல்லாம் இன்று அழியும் நிலைக்கு வந்துள்ளன.

மோடி அரசு விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறுதொழில் முனைவோர்கள் ஆகியோருக்கும் எதிரானது; அம்பானி, அதானி முதலான பெருமுதலாளிக்கு மட்டுமே அது ஆதரவானது என இப்படி உருவாகியுள்ள பிம்பம்தான் இன்று பெரும் கனவுகளுடன் காத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

யஷ்வந்த் சின்ன்ஹா, சுப்பிரமணிய சாமி முதலான அவர்களின் முன்னாள் அமைச்சர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் அவர்களுக்கு இன்னும் பெரிய பாதிப்புகளை உருவாக்கியுள்ளன. “மிகப் பெரிய பொருளாதாரச் சரிவையும் (major depression), நிலைகுலைவையும் (crash) மோடியின் இந்தியா சந்திக்கப் போகிறது; வங்கிகள் திவாலாகப் போகின்றன, தொழிற்சாலைகள் மூடப்படப் போகின்றன” எனவும், “மோடி அரசு வெளியிட்டுள்ள பொருளாதார வளர்ச்சி வீதம் தவறானது, மிகைப்படுத்திச் சொல்லப்படுவது” – எனவும் சு.சாமி சொல்லியுள்ளார். மகாராஷ்டிரத்தில் இவர்களின் கூட்டணி ஆட்சியிலுள்ள சிவசேனாவும், இந்த ஆட்சியின் மீது அதிருப்தியில் உள்ள சத்ருகன் சின்ஹா போன்றோரும் இன்று எதிர்க் கட்சிகளுடன் இணைந்து அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மன்மோகன்சிங் தலைமையில் அமைந்திருந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. எனினும் அது இந்தியாவில் பெரிய பாதிப்பை எற்படுத்தாமல் காத்ததில் பொருளாதார வல்லுனரான மன்மோகன் சிங்கிற்கு முக்கிய பங்குண்டு. ஆனால் மோடி- அமித்ஷா ஆட்சி பதவி ஏற்றபோது உலகெங்கிலும் பெட்ரோல் விலை குறைந்து சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டிருந்தது. சாதகமான சூழல் இருந்தும் இன்று இப்படியான பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதில் மோடியின் திறமையின்மை, மூட முரட்டுத்தனம் முதலியன முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை யஷ்வந்த் சின்ஹா முதலானோரின் விமர்சனங்கள் உறுதிப்படுத்தும்போது அது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

இந்த விமர்சனங்களைச் சமாளிப்பதற்காகக் களம் இறக்கப்பட்ட்ட்ட மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங், யஷ்வந்த் சின்ஹாவின் மகனும் இன்றைய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா ஆகியோரின் வாதங்கள் எடுபடவில்லை. எல்லாம் சரிதான் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் இல்லையே என First Post முதலான தளங்கள் கேட்டுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ் இன்று தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற விமர்சனங்களை அது வெளிப்படையாக வைப்பதில்லை. ஆனால் இன்று வெளிப்படையாகவே பேச வேண்டிய நிலைமை அதற்கு ஏற்பட்டுவிட்டது.

எப்படியாவது மோகன் பகவத்தைச் சமாதானப்படுத்தலாம் எனும் முனைப்போடு அவரது உரைகளை எல்லாம் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தை அமித்ஷா வெளியிட்டுள்ளார். இன்னொரு பக்கம் என்னதான் நம்ம ஆட்சியைப் பிடிக்காதவர்கள் விமர்சனங்களை வைத்தாலும் எதிர்க் கட்சிகளில் நம்ம மோடிக்கு இணையான தலைவர்கள் யாரும் இல்லையே எனச் சொல்லி பகவத்திற்கு ஆறுதல் சொல்லவும் அமித்ஷா முயல்கிறார். அதுவும் பெரிதாக எடுபடவில்லை..

“அதெல்லாம் சரி. எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க என்ன வழி?” என்கிற கேள்விக்கு மோடியிடமோ அமித்ஷாவிடமோ பதில் இல்லை.

(அடுத்து: வரலாறு காணா வகையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்புக் குறைவு)

இதையும் படியுங்கள்: நீங்கள் பார்க்காத அமெரிக்கா

அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்