(November 23, 2015)
பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்கள் பொது இடத்தில் பேச மறுத்தாலும், மாதவிடாயை பெண்களை அடக்கும் ஒரு கருவியாகத்தான் இன்று வரை கையாண்டு வருகிறார்கள். சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தான தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், “கோவில்களுக்குள் வரும் பெண்களுக்கு மாதவிடாய் ஆகிறதா? என்பதை சோதிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு பிறகு பெண்களை கோவில்களுக்குள் உள்ளே விடுவது பற்றி யோசிக்கலாம்.”, என கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள சில பெண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், Countercurrents.org என்ற அமைப்பு சமூக வலைத்தளத்தில் பெண்களை, “Happy to Bleed”, (ரத்தம் வருவதில் சந்தோஷம்) என்ற வாசகத்தை நாப்கின்கள், காகிதங்களில் எழுதி அதனை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அதில், “பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது கோவில்களுக்குள் நுழைகிறார்களா என்பதைக் கண்டறிய ஒரு உபகரணத்தைக் கண்டறிய வேண்டும் என்கிறார்கள். அதனை கண்டறிவது முக்கியமா என்பதை விட பெண்கள் கோவில்களுக்குள் நுழைய வேண்டுமா என்பது பற்றித்தான் பிரயார் கோபால கிருஷ்ணன் சிந்தித்திருக்கிறார். இதன் மூலம் பெண்கள் மீதுள்ள வெறுப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.”, என கூறப்பட்டுள்ளது.
இதுவரை அதில் 100 பெண்கள் இணைந்துள்ளனர். ஆண்கள் சிலரும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். “எனக்கு கருப்பை இருக்கிறது. அதனால் மாதத்திற்கு ஒருமுறை அதிலிருந்து ரத்தம் வழியும். எனக்கு மாதவிடாய் ஏற்படும்போதும் நான் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் கடவுளுக்குக் கோபம் ஒன்றும் வராது. திரு.பிரயார் கோபால கிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போன்றுதான் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமற்றவர்கள் என பலரும் நினைக்கிறார்கள். இதே சுத்தமற்ற ரத்தத்தில்தான் நீங்கள் 9 மாதங்கள் உங்கள் அம்மாவின் கருவறையில் இருந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்”, என சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை போடுபவர்கள் எழுதியுள்ளனர்.
ஆனால், இதற்காக பல எதிர்வாதங்களும் வந்துகொண்டிருக்கின்றன. “இதெல்லாம் பெண்ணியமா? கிராமங்களிலும் வீடுகளிலும் அன்றாடம் முடங்கியிருக்கும் பெண்களுக்காக உங்கள் பெண்ணியக் கருத்துக்களை பயன்படுத்துங்கள். வெற்று விளம்பரத்துக்காக அல்ல.”, என்றும் சிலர் தங்கள் எதிர்ப்பை பதிவிடுகிறார்கள். எல்லா நாடுகளிலும் பெண்ணியத்தை பெண்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும்தான், “கோவில்களில் நுழைய தடை”, “பெண்களின் கற்பை சோதிப்பது”, என பெண்களை மறுபடியும் அடிமைப்படுத்துவதற்கான சிலவற்றிற்காக தங்கள் குரலை போலி பெண்ணியவாதிகள் சத்தம் போட்டு பேசுவார்கள்.