உத்தரப் பிரதேச மாநிலம் பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரைப் பணியிடை நீக்கம் செய்தது வெறும் கண்துடைப்பே என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குள் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய அம்மாவட்ட நீதிபதி ராஜீவ் ரவுதலா, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து முக்கிய எதிர்க்கட்சிகளான, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசைக் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைவரை மாநில அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆனால் இந்த நடவடிக்கை வெறும் கண் துடைப்பே என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான குலாம்நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி ஏற்கனவே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொண்டு எடுக்கப்படவில்லை. தற்போது கல்லூரி முதல்வரை பணியிடை நீக்கம் செய்திருப்பது என்பது வெறும் கண் துடைப்பே” என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர், ”யோகி ஆதித்யநாத் இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட இந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு எப்படி இந்த குறைபாடுகள் தெரியாமல் இருந்திருக்கும். மருத்துவர்கள் நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

மேலும், தான் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த மருத்துவமனைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாகவும், தானே அடிக்கடி சென்று பார்வையிட்டதாகவும் தெரிவித்தார். ஆக்ஸிஜன் குறைபாட்டால்தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தன்னால் 100 சதவிகிதம் உறுதியாகக் கூற முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த துயரச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று மாநில அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ”பன்மைக் கலாச்சார இந்தியாவில் பாஜகவின் ஒற்றைக் கலாச்சாரம் நடக்காது ”: சமரசம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்