கர்நாடக பாரதிய ஜனதா கட்சி ஊழலில் உலக சாதனை படைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். கொப்பல் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு ஏதும் இல்லை என்றும், எடியுரப்பா தலைமையிலான முந்தைய பாரதிய ஜனதா கட்சி ஊழலில் உலக சாதனை படைத்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் சதானந்த கவுடா, ஜகதீஷ் ஷெட்டர் மற்றும் எடியுரப்பா ஆகிய மூன்று பேர் முதல்வராக இருந்ததாகவும், நான்கு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிறைக்குச் சென்றதாகவும் குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு விவசாயிகளின் பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய மறுக்கும்போது, கர்நாடக அரசு விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்திருப்பதைப் பாராட்டுவதாகவும், இதுதான் பாஜகவுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் இடையிலான வேறுபாடு என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்