தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் 2017-18ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமை (இன்று) தாக்கல் செய்தார். அப்போது அவர், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பெயர் குறிப்பிட்டதற்கு எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சிறிது நேரம் கழித்து, மீண்டும் பட்ஜெட் தாக்கலை நிதியமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்தார்.

பட்ஜெட் தாக்கல் நிறைவு பெற்றதும் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நிதி நிலையை பொறுத்தவரையில் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ’புதிய மொந்தையில் பழைய கள்’ என்று சொல்வார்களே, அந்த வகையில்தான் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கை அமைந்திருக்கிறது. அதிமுக ஆட்சியை பொறுத்தவரையில், அது அம்மையார் ஜெயலலிதா தலைமையில் இருந்த ஆட்சியாக இருந்தாலும், அதனைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடந்த ஆட்சியாக இருந்தாலும், அல்லது இப்போது எடப்பாடி தலைமையில் நடைபெறும் பினாமி ஆட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆண்டும் கடன் மட்டுமே அதிகரிக்கும் சூழ்நிலையில் தான் நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : ’உணவே விஷம், விஷமே உணவு’: சாப்பிடுவதற்கு முன் படியுங்கள்

இந்த நிதி நிலை அறிக்கையில்கூட, ‘31-03-2018 ல் 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாய் கடன் இருக்கும்’, என்று அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரு மிகப்பெரிய கடனாளியாக இருக்கும் சாதனையை இந்த ஆட்சி படைத்திருக்கிறது.

இந்த நிதி நிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் குறித்து எதுவுமே கிடையாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்ற நிலையே இதில் இல்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பற்றி இதில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த மாநாட்டை நடத்தியபோது 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அந்த ஒப்பந்தங்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் ஏதாவது நிதி ஒதுக்கீடு எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை. அதேபோல, புதிய மின் திட்டங்களுக்கு என்ன வழி? அதுபற்றி ஏதாவது குறிப்பிட்டுக் காட்டப்பட்டு இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. ஏற்கனவே ஆளுநர் உரையில் அறிவித்து இருக்கக்கூடிய திட்டங்கள், இடையிடையே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் இந்த நிதி நிலை அறிக்கையில் ஏதாவது நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறதா என்றால் அதுவுமில்லை.

மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட தொலை நோக்கு திட்டம் 2023, அதேபோல 110 என்ற விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறதா என்றால் இல்லை. இந்த நிலையில் தான் இன்றைக்கு நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆகவே, நான் ஏற்கனவே சொன்னபடி, இந்த நிதி நிலை அறிக்கையில் எதுவுமில்லை என்பது தான் உண்மை. எனவே, குற்றவாளி வழிகாட்டக் கூடிய ஆட்சியாக அமைந்திருக்கின்ற இந்த பினாமி ஆட்சியில் அரசு நிர்வாகம், நிதி நிர்வாகம் என்கின்ற அகல் விளக்குகள் அணைக்கப்பட்டு, சாம்பலாக்கப்பட்டு இருக்கிறது என்பது தான் உண்மை. ஆகவே, இந்த நிதி நிலை அறிக்கையை பொறுத்தவரையில், ’பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியத்தை நடத்த’ முயற்சித்து இருக்கிறார்களே தவிர, வேறொன்றும் இதில் இல்லை என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இதையும் படியுங்கள் : முதல்முதலாக சினிமாவுக்காக குடித்தேன் – ஹன்சிகாவின் ஒப்புதல் வாக்குமூலம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்