பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற போராட்டங்களைக் கையாளும் தகுதியோ, திறமையோ இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் வீட்டுக்கு செல்வதே தமிழகத்திற்கு நல்லது என்று திமுக செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தங்களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் தொடர் போராட்டத்தை ‘குதிரை பேர’ அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், அந்தப் போராட்டத்தைக் காவல்துறை மூலம் அடக்கி விடலாம் என்று நினைப்பதற்கும் திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக்கொளவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆக.22ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்த அரசு ஊழியர்களை, வேலை இழக்க நேரிடும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மிரட்டியிருப்பது வேதனைக்குரியது என தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற விருக்கும் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அடக்குமுறை மூலம் சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தை ‘குதிரை பேர’ அரசு கைவிடுவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கங்களை உடனடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை என்றும், ஆனால் குதிரை பேரத்தால் தொடரும் இந்த அரசிடமிருந்து அந்த நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற போராட்டங்களைக் கையாளும் தகுதியோ, திறமையோ இல்லாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் வீட்டுக்கு செல்வதே தமிழகத்திற்கு நல்லது என்பதால், அரசு ஊழியர்களுடன் இணைந்து இந்த அரசை ஜனநாயகரீதியில் வீழ்த்தி, அரசு ஊழியர்களையும் – தமிழக மக்களையும் காப்பாற்றும் பணியில் திமுக தீவிர கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: “ஒரு ட்வீட்டுக்கு 10 ரூபாய் கொடுத்து ட்ரெண்ட் செய்வோம்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்