தனது சிகிச்சைக்காக வைத்திருந்த நிதியை கேரள வெள்ள நிவாரணத்துக்கு அளித்த சிறுமியின் இதய அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து தர ஒரு மருத்துவமனை முன்வந்துள்ளது.

கரூர் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிமணி (36). இவரது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். இவர்களது ஒரே மகள் அக்‌ஷயா (6) .

அக்‌ஷயா அரசுப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கிறார். உடல்நலக் குறைவால் அடிக்கடி பாதிக்கப்பட்ட அக்‌ஷயாவை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் கோளாறு உள்ளதை தெரிவித்து அவருக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும் என்று கூறினர்.

அக்‌ஷயாவின் சிகிச்சைக்கு தேவைப்படும் நிதி குறித்து வலைதளங்களில் சாதிக், சலீம் பதிவிட்டனர். அதன் காரணமாக முதற்கட்ட சிகிச்சைக்குத் தேவைப்பட்ட ரூ.3 லட்சம் கிடைத்தது. அதில் சில மாதங்களுக்கு முன் அக்‌ஷயாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக ரூ.2.5 லட்சம் தேவைபட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வழியாக உதவியை எதிர்பார்த்து ஜோதிமணியும் அவர் மகள் அக்‌ஷயாவும் காத்திருந்தனர். இதுவரை ரூ. 20 ஆயிரம் வரையில் உதவி கிடைத்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கனமழைக்க் காரணமாக வெள்ளம் வந்து பாதிப்படைந்ததை அடுத்து அக்‌ஷயா அறுவை சிகிச்சைக்கு சேர்த்து வைத்திருந்த பணத்தில் ரூ 5000 த்தை வெள்ள நிவாரணத்திற்காக அளித்தார்.

தனது இதய அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதத்துக்குள் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் தேவை என்ற நிலையில் சிகிச்சைப் பணத்தில் நிவாரணத்துக்கு நிதி அளித்த சிறுமியின் குணம் பலரையும் நெகிழ வைத்தது .

இதைப் பார்த்த திருவனந்தபுரத்தில் உள்ள திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Sree Chitra Tirunal Institute for Medical Sciences and Technology (SCTIMST)) சிறுமி அக்‌ஷயாவுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்வதாக அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர், மருத்துவர் ஆஷா கிஷோர், ”அக்‌ஷயா செய்த செயல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது, அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here