இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதை திமுக ஊக்கப்படுத்தாது என அக்கட்சியின் செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து வைத்து வருகிறார்.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் என்றமுறையிலும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையிலும் இதுகுறித்து நான் ஏற்கனவே தெளிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறேன். சில ஊடகங்கள், அதில் சிலவற்றை திரித்து, செய்தியாக வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே, நான் தெளிவாக குறிப்பிட விரும்புவது, இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதை திராவிட முன்னேற்றக் கழகம் ஊக்கப்படுத்தாது, உடன்படாது.

stalin

கவிஞர் வைரமுத்து அவர்களே இதுதொடர்பாக மனம் திறந்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். தினமணி பத்திரிகையும் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதன் பிறகும் இதனை பூதாகரமாக பெரிதாக்கி, அதன் மூலமாக அரசியலுக்குப் பயன்படுத்தி, சதி செய்யும் வேலையில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். அது தவறு. அதனை வளர விடுவது நல்லதல்ல. எனவே, அதை நான் கண்டிக்கிறேன்.” என்றார். மேலும் அவர், தான் எப்படியாவது வளர வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட, தேவையற்ற கருத்துகளை ஹெச்.ராஜா தெரிவித்து வருகிறார் என்பதுதான் என்னுடைய கருத்து என்றார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்