இவர்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் – சமந்தா வெளியிட்ட திடீர் ஆசை

சமந்தா திடீரென சொன்னதாக இருக்கலாம். ஆனால், அவர் மனதில் இந்த ஆசை நெடுநாளாக இருந்திருக்க வேண்டும். அதாவது, மணிரத்னம் மற்றும் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது சமந்தாவின் ஆசையாம். இவர்கள் இருவரது இயக்கத்திலும் சமந்தா இதுவரை நடித்ததில்லை. கடந்த இரு வருடங்களில் அதிக வெற்றியை தந்த நடிகை சமந்தாவாகவே இருப்பார். இந்த வருடம் சமந்தா நடிப்பில் தமிழில் வெளியான சூப்பர் டீலக்ஸ் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. தெலுங்கில் வெளியான மஜிலி சூப்பர் ஹிட். சென்ற வாரம் வெளியான சமந்தாவின் நாயகி மைய திரைப்படமான ஓ பேபி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்தே மணிரத்னம், சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை சமந்தா வெளியிட்டுள்ளார்.

கோலமாவு கோகிலா இயக்குநரின் விளம்பரமும் விஐபிகள் ரியாக்ஷனும்

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தனது அடுத்தப் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை, விருப்பமுள்ளவர்கள் விவரங்களை அனுப்பவும் என விளம்பரம் தந்துள்ளார். இதனை பார்த்ததும் அனிருத், சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் உள்பட பல திரையுலக பிரபலங்களும், நாங்க ரெடி என்று இணையத்தில் பதிலளித்திருக்கிறார்கள். நெல்சன் திலீப்குமாரின் அடுத்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பார் என கூறப்பட்ட நிலையில் இந்த விளம்பரம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனால்தான் நிவேதா பெத்துராஜ் மாஃபியாவில் நடிக்கவில்லையாம்

கார்த்தின் நரேனின் மாஃபியாவில் நிவேதா பெத்துராஜ் நடிப்பதாக அறிவித்து கடைசியில் அவருக்குப் பதில் ப்ரியா பவானி சங்கரை ஒப்பந்தம் செய்துள்ளனர். நிவேதா தெலுங்கில் அல்லு அர்ஜுன் படத்தில் நடித்து வருகிறார். அல்லு அர்ஜுனின் அடுத்தப் படம் ஐகானில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனால்தான் அவர் தமிழில் நடிக்கவில்லை என்று கூறியிருந்தோம். தற்போது தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நிவேதா ஒப்பந்தமாகியுள்ளார். ராம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை கிஷோர் திருமலா இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் தேதியுடன் மாஃபியா படத்தின் தேதி கிளாஸ் ஆனதால்தான் மாஃபியாவிலிருந்து நிவேதா விலகியதாக உறுதி செய்துள்ளனர்.

முருகதாஸின் அடுத்தப்பட ஹீரோ இவரா…?

ரஜினி நடிப்பில் தர்பார் படத்தை இயக்கிவரும் முருகதாஸ் அடுத்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கலாம் என ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதற்குமுன் சிரஞ்சீவி, மகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் படங்கள் இயக்கியுள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் இதுவரை படம் இயக்கியதில்லை. தெலுங்கு, தமிழ் இருமொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தாணு தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here