இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஹெட்டிங்லேவில் இன்று(செவ்வாய்க்கிழமை) மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஆடுகிறது இந்தப் போட்டில் வென்று ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் இன்று களம் காண்கின்றன.

முதல் ஒரு நாள் ஆட்டத்தை இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தை இங்கிலாந்து 86 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றன. இதனால் போட்டி 1-1 என சமநிலையில் உள்ளது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இது வரை தமது பங்களிப்பை சரிவரச் செய்யாதது அணியின் தோல்விகளுக்குக் காரணமாகப் பார்க்கலாம்,தோனியும் சரிவர ஆடாதது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் முதலிரண்டு ஆட்டங்களில் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து அணியினரை மிரட்டி வருகிறார்.

ஆனால் வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், பும்ரா ஆகியோர் இல்லாத நிலையில், வேகப்பந்து வீச்சு பலமிழந்து காணப்படுகிறது.

இங்கிலாந்து அணியில் ஜேஸன் ராய், ஜோ ரூட், மோர்கன் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினாலும் மற்றவர்கள் சரியான பங்களிப்பை சரியாக வழங்கவில்லை, இது இங்கிலாந்தின் தோல்விகளுக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியில் பிளங்கட் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே இன்றைய போட்டியில் விளையாட இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஹேம்ப்ஷையர் அணி கேப்டன் வின்ஸ் சேர்க்கப்பட்டது கூடுதல் பலத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 ம் ஆண்டு அக்டோபரில் ஒரு நாள் போட்டியில் ஆடிய வின்ஸ் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் தற்போதுதான் மீண்டும் இங்கிலாந்து அணியில் ஆடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அதே போல் கென்ட் அணியில் ஆடிவரும் சாம் பில்லிங்சும் அழைக்கப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் சதம் அடித்து மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளார்.

டி 20 தொடரைப் போலவே 2-1 என ஒரு நாள் போட்டித் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்த ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பு இந்திய நேரப்படி இரவு 5.00 மணிக்கு சோனி டென் 2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்களில் காணலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்