ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் கடந்த மாதம் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்தார்.

இங்கிலாந்து நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவில் இருப்பவரே அந் நாட்டின் பிரதமர் பதவியில் அமர்த்தப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி ஆரம்பமாகியது.

கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவர் (பிரதமர்) யார்? என்பதை தீர்மானிக்க இருக்கின்றன.

உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளில் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பதை குறிப்பிட்டு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பினர். வாக்குச்சீட்டுகளை திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் நேற்று(திங்கள்கிழமை) மாலையுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். உடனடியாக பிரதமர் தெரசா மே, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார். அதன் பின்னர் ஆளும் கட்சியின் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார். இதையடுத்து புதிய பிரதமர் பதவி ஏற்பார்.

போரிஸ் ஜான்சனுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அதிக ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரியவந்திருப்பதால் அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆவார் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here