ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர  காட்டுத்தீ வேகமாக  பரவி வருகிறது. இதனால் எழுந்துள்ள புகையால்  ஆஸ்திரேலிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா உள்பட பல்வேறு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக எரிந்துவரும் காட்டுத்தீயால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 1 கோடியே 20 லட்சம் ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ள நிலையில், ஆயிரத்து 400 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் தென் கடற்கரை மற்றும் விக்டோரியாவில் உள்ள கிழக்கு கிப்ஸ்லேண்டில் உள்ள தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீ வேகமாக பரவி வருகிறது.

இங்கு வெப்ப நிலை சனிக்கிழமை பிற்பகல் 44 டிகிரி செல்சியஸ் (111 டிகிரி பாரன்ஹீட்) ஐ எட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு சிட்னியின் புறநகர்ப் பகுதியான பென்ரித்தில், வெப்பநிலை 48.9 டிகிரி செல்சியஸ் (120 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது.

விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஓமியோ பிராந்தியத்தில் ஒரே இரவில் தீ விபத்து 6,000 ஹெக்டேர் (23 சதுர மைல்) அளவுக்கு தீப்பிடித்ததாக கிப்ஸ்லேண்டின் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

காட்டுத்தீக்கு இதுவரை சுமார் 48 கோடி விலங்கினங்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீயில் சிக்கி ஏற்கெனவே 21 பேர் உயிரிழந்திருந்த நிலையில், கங்காரு தீவில் சாலையில் சென்றுகொண்டிருந்த காரை காட்டுத்தீ சூழ்ந்ததில், அதில் பயணம் செய்து கொண்டிருந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆகியுள்ளது.

விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்றுவருகின்றன.

காட்டுத்தீயால் விண்ணை முட்டும் அளவிற்கு புகைமூட்டம் இருப்பதால் ஆஸ்திரேலியா மட்டுமின்றி, நியூசிலாந்திலும் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் 3 ஆயிரம் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜனவரி 13 முதல் 16 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தங்கள் நாட்டின் பேரிடரை கருத்தில் கொண்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here