இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. 4 விக்கெட் இழப்புக்கு 303 என்ற நேற்றைய ஸ்கோருடன் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தது இந்தியா.

ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விஹாரி, நாதன் லயன் பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடிய புஜாரா 150 ரன்களை கடந்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரில் அதிக பந்துகளை சந்தித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

உணவு இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 181 ரன்களுடனும், ரிஷப் பந்த் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன், ஹேசல்வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

உணவு இடைவேளைக்கு பின் புஜாரா 193 ரன்கள் எடுத்த நிலையில் இரட்டை சதத்தை நழுவ விட்டு ஆட்டமிழந்தார். புஜாரா இந்த தொடரில் 500 ரன்களையும் கடந்து அசத்தினார்.
தேநீர் இடைவேளையின் போது இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 491 ரன்கள் குவித்தது.

தேநீர் இடைவேளைக்குபின் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது சதத்தை நிறைவு செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் சதமடிக்கும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா அதிரடியாக ஆடி 81 ரன்குவித்து நாதன் லயன் பந்தில் போல்டானார். அத்துடன் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்தது, ரிஷப் பந்த் 159 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலியாவில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அதிக ரன் குவிப்பதும், சதமடிப்பதும் இதுவே முதல்முறையாகும். அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றார். இவருக்கு முன் முதலிடத்தில் 224 ரன்கள் குவித்து தோனி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here