மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மெல்போர்னில் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கியது. மழையால் ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது. டாஸ் வென்று இந்திய கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ராயுடு, சிராஜ், குல்தீப் ஆகியோருக்குப் பதிலாக ஜாதவ், விஜய் சங்கர், சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பந்துவீச்சுக்குச் சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் மிகத் திறமையாகப் பந்து வீசினார்கள்.

ஆஸ்திரேலிய அணியில் கேரி 5 ரன்களிலும் ஃபிஞ்ச் 14 ரன்களிலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஒன்று சேர்ந்த கவாஜாவும் மார்ஷும் அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர்.

இந்நிலையில் மார்ஷ் 39 ரன்களிலும், கவாஜா 34 ரன்களிலும் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இதன்பின் 10 ரன்களில் ஸ்டாய்னிஸை வீழ்த்தினார் சாஹல். 5 பவுண்டரிகள் அடித்து மேக்ஸ்வெல் 26 ரன்களில் வெளியேறினார்.

இதன் பின் ஆஸ்திரேலிய அணி குரைந்த இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. ஜை ரிச்சர்ட்சன் 16 ரன்களிலும் பொறுப்புடன் விளையாடி ஆஸ்திரேலிய அணி 200 ரன்களைக் கடக்கக் காரணமாக இருந்த ஹேண்ட்ஸ்காம்ப் 58 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்டேன்லேக்கை போல்ட் செய்தார் ஷமி. ஸாம்பா 8 ரன்களில் ஆட்டமிழக்க, 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி.

10 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி னார் சாஹல். மேலும் புவனேஸ்வர் 2, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

230 ரன் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் 46 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து, ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்நிலையில் ஜோடி சேர்ந்த கோலியும் தோனியும் நிடானமாக ஆடினார்கள். இருவரும் 74 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி 46 ரன்களில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தோனி ஆரம்பத்தில் தடுமாற்றத்துடன் விளையாடினாலும் (ஒரு கேட்சையும் ரன் அவுட்டையும் ஆஸி. வீரர்கள் தவறவிட்டார்கள்) 74 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இந்தத் தொடரில் தொடர்ச்சியாக தோனி மூன்று அரை சதங்கள் எடுத்துள்ளார்.

இந்தியா, 49.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களை அடித்து நொருக்கி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி அபாரமாக ஆடி 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேதர் ஜாதவ் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டோனின்ஸ், ரிச்சர்ட்ஸன், சிடில் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய மண்ணில் டி20 தொடரை சமன் செய்து, டெஸ்ட்டை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் முழுமையாக வென்று விராட் கோலி தலைமையிலான இந்தியஅணி சாதனை படைத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here