சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்படும் இந்தியப் படத்துக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்தியப் படங்களே ஆஸ்கர் விருதுக்கு (டாப் 5) இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த மூன்று படங்களும் ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. இதையடுத்து சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை இதுவரை எந்தவொரு இந்தியப் படமும் பெறவில்லை என்கிற நிலைமை கடந்த வருடம் வரை தொடர்கிறது.

இந்நிலையில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு 25 இந்தியப் படங்கள் போட்டியிடுகின்றன. அந்த 28 படங்களிலிருந்து ஒரு படத்தை இந்தியா சார்பாகத் தேர்வு செய்வதற்கான பணி முதல்முறையாக கொல்கத்தாவில் தற்போது நடைபெற்று வருகிறது. எட்டு ஹிந்திப் படங்கள், 3 தமிழ்ப் படங்கள் என 28 படங்கள் இதற்காகப் போட்டியிடுகின்றன. தமிழ்ப் படங்களான சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, வட சென்னை ஆகிய மூன்று படங்கள் இப்போட்டியில் உள்ளன. கொல்கத்தாவில் செப்டம்பர் 18 அன்று தொடங்கிய இப்படங்களின் திரையிடல் நாளை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக்குழுவின் தலைவராகச் செயல்படுகிறார்.  

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் எந்தப் படம் தேர்வாகும் என சினிமா ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். தேர்வாகவுள்ள படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.