ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு லிட்டர் “க்ரீன் மேஜிக்’ ஆவின் பால் இனி ரூ.47-க்கு கிடைக்கும். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் “ஆவின் நைஸ்’ பால் லிட்டருக்கு ரூ.36-இல் இருந்து ரூ.42-ஆக உயர்கிறது.

ஆவின் பால் விலை மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாகவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டுமெனவும் உற்பத்தியாளர் சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் சார்பில் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர்.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4.60 லட்சத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28-இல் இருந்து ரூ.32 ஆக, அதாவது லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுகிறது. எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35-இல் இருந்து ரூ.41 ஆக, அதாவது லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

திங்கள்கிழமை நாளை முதல் பால் விலை

உயர்வு: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதால் பால் பணப்பட்டுவாடா பாதிப்படையக் கூடாது என்பதாலும், நுகர்வோருக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம்  செய்வதை உறுதிப்படுத்தவும் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும். இந்த விலை உயர்வானது திங்கள்கிழமை 

(ஆகஸ்ட் 19) முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திமுக கோரிக்கை-அரசு அறிவிப்பு: பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை என சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் திமுக கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்திக் கொடுக்கும் போது, நுகர்வோருக்கும் கட்டணம் உயரும். பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும் பால் உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்திக் கொடுக்கப்படும். அதே போன்று நுகர்வோருக்கு வழங்கப்படும் பாலின் விலையும் உயர்த்தப்படும் என்றார். இந்த விலை உயர்வு பொதுமக்களை பாதிக்காத அளவுக்கு இருக்கும் என்று பேரவையில் அறிவித்திருந்தார். 

மேலும், கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் முதல்வர் கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் அண்மையில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அப்போது, பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று முதல்வர் உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஆவின் பால் விலையும் லிட்டருக்கு ரூ.6 அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெண்ணெய், நெய் விலையும் உயர்கிறது: ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் போன்ற பொருள்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகின்றன. ஆவின் பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்டு தயாரிக்கப்படும் அந்தப் பொருள்களின் விலையும் விரைவில் உயர்த்தப்படும் என ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

அரை கிலோ வெண்ணெய் ரூ.220 ஆகவும், நெய் அரை லிட்டர் ரூ.235 ஆகவும், பாதாம் மிக்ஸ் 200 கிராம் ரூ.80 ஆகவும், கோவா 500 கிராம் ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதால் மதிப்புகூட்டப்பட்ட வெண்ணெய், நெய் போன்ற பொருள்களின் விலையும் வெகுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை  உயர்வு ஓரிரு நாள்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.

8 ஆண்டுகளில் 3 முறை விலை உயர்வு…

கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மூன்று முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2011-இல் மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பால் விலை லிட்டருக்கு ரூ.6.25-ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, ரூ.17.75-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பால் ரூ.24 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன்பின்பு, 2014-ஆம் ஆண்டு அக்டோபரில் ஆவின் பால் விலையை அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உயர்த்தினார். லிட்டருக்கு ரூ.10 என்ற அளவில் அதிகரிக்கப்பட்டது. அதன்படி, ரூ.24-ஆக இருந்த ஒரு லிட்டர் பால் விலை ரூ.34 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு ரக பால் வகைகளுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Courtesy: DN