ஆவின் காலி பால் பாக்கெட்டுகளை திருப்பிக் கொடுத்தால் பணம் கிடைக்கும்

0
262

மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவின் உள்ளிட்ட பால் கவர்களை முகவர்களிடமே கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஆவின் நிறுவனம் தினமும் 40 லட்ச நெகிழி பால் பாக்கெட்டுகளைப் பயன்படுத்துகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழி பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

எனினும் இந்த தடையில் இருந்து பால், எண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்திக் கொள்ள அரசு விலக்கு அளித்துள்ளது. 

எனினும், ஆவின் நிறுவனம் நெகிழி பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், ஆவின் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் கப்புகள் கொடுப்பது நிறுத்தப்பட்டு, ஸ்டீல் மற்றும் கண்ணாடி கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், ஆவின் வாடிக்கையாளர்கள் காலி பிளாஸ்டிக் கவர்களை சில்லறை விற்பனை நிலையங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட சில இடங்களில் கொடுத்து கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.