ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்காக மூன்று கோடியே நாற்பது இலட்ச ரூபாய் மதிப்பில் சேட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் கருவிகள் வாங்கத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

புயல் மழைக் காலங்களில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களைத் தொடர்பு கொள்ளவும் அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டறியவும் சேட்டிலைட் போன்கள், ஜி.எபி.எஸ் கருவிகள் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 3கோடியே நாற்பது இலட்ச ரூபாய் செலவில் 181 சேட்டிலைட் போன்கள், 240 நேவிக் கருவிகள், 160 நேவ்டெக்ஸ் கருவிகள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு முதற்கட்டமாக 21 சேட்டிலைட் போன்களை 20லட்சம் ரூபாய்க்குத் தமிழக அரசு வாங்கியுள்ளது. 240 நேவிக் கருவிகளை இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும், 160 நேவ்டெக்ஸ் கருவிகளை வெளிநாட்டில் இருந்தும் வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

15முதல்20 படகுகள் கொண்ட ஒரு குழுவுக்கு 2சேட்டிலைட் போன்கள், 3நேவிக் கருவிகள், 2 நேவ்டெக்ஸ் கருவிகள் என்கிற கணக்கில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதன்மூலம் பேரிடர்க் காலங்களில் முன்கூட்டியே ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு எளிதில் எச்சரிக்கை வழங்க முடியும். அவர்கள் கடலில் தத்தளித்தால் இருக்குமிடத்தை அறிந்து அவர்களை எளிதில் மீட்கவும் முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here